

புது டெல்லி: “போராட்டங்களைக் கையாண்ட விதம் குறித்து மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவின் கல்வி அமைப்பு ஆர்எஸ்எஸ் அமைப்பால் எவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்து உண்ணாவிரதத்தில் இருந்த மாணவர்களுடன் நான் கலந்துரையாடினேன். மாணவர்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள், அவற்றை விட்டுக்கொடுக்கவே முடியாது. இதை நான் மட்டும் சொல்லவில்லை, இந்தியாவின் மாணவர்களே இதைச் சொல்கிறார்கள்.
முதல் கோரிக்கை என்னவென்றால், ஊழல்வாதியும், திறமையற்றவரும், பொறுப்பற்றவருமான கல்வி அமைச்சர் பதவி நீக்கப்பட வேண்டும். தர்மேந்திர பிரதானை கல்வித் துறையிலிருந்து வேறு துறைக்கு மாற்றுவதே தீர்வு என்று பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பேசப்படுகிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
தர்மேந்திர பிரதானை ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு மாற்றுவது பற்றிய பேச்சுக்கே இடமில்லை. அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். நமது மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் அடையாளமாக தர்மேந்திர பிரதான் இருக்கிறார்.
இரண்டாவது கோரிக்கையாக, நேற்று கண்ணில் சுடப்பட்ட ஓர் இளைஞரை நான் அறிமுகப்படுத்தினேன். மேலும், ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கால்கள் தடியடிக்கு உள்ளாகி உடைக்கப்பட்டுள்ளன. அவர்களின் உடல்களில் பெல்லட் குண்டுகள் தாக்கப்பட்டுள்ளன. இதற்குப் பொறுப்பானவர்கள், இதனை திட்டமிட்டவர்கள் மற்றும் அதைச் செயல்படுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஒட்டுமொத்த அமைப்பின் தலைவரான பிரதமர் மோடி, மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். கல்வி அமைச்சரை நீக்குதல், போராட்டக்காரர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் பிரதமர் மன்னிப்பு கோருதல் ஆகிய மாணவர்களின் மூன்று கோரிக்கைகளும் மிகத் தெளிவானவை, அவை கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும்” என்று கூறினார்.