

புது டெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமதுவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமதுவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது வலுவான அரசியல், கலாச்சார, வர்த்தக, எரிசக்தி தொடர்புகளையும் மக்களுக்கு இடையேயான உறவுகளையும் கொண்டுள்ள இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விரிவான உத்திசார் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் எடுத்துரைத்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஜனவரி 2026-ல் இந்தியாவிற்கு மேற்கொண்ட, பயணங்களையும், பிரதமர் நரேந்திர மோடி மே 2026-ல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேற்கொண்ட பயணத்தையும் அவர்கள் நினைவுகூர்ந்தனர்.
இந்தியாவின் தலைமையின் கீழ் பிரிக்ஸ் அமைப்பில் ஐக்கிய அரபு அமீரகம் ஆற்றிய செயல்திறன் மிக்க, ஆக்கப்பூர்வமான பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். இந்தியாவின் தலைமையின் கீழ் பிரிக்ஸ் அமைப்பிற்குள் ஏற்பட்ட நேர்மறையான விளைவுகளை தலைவர்கள் வரவேற்றதோடு, இரு நாடுகளும் தங்களின் பொதுவான நலன்களையும் முன்னுரிமைகளையும் முன்னெடுத்துச் செல்லவும், பிரிக்ஸ் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டனர்.
பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தலைவர்கள் வரவேற்றனர். இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த அலுமினிய முதலீடான, ஒடிசாவில் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒருங்கிணைந்த புதிய அலுமினியத் திட்டத்தின் மேம்பாட்டில் முதலீடு செய்வதாக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனம் அறிவித்ததை அவர்கள் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். இத்திட்டம் ஒடிசாவை ஒரு உலகளாவிய அலுமினிய உற்பத்தி மையமாக நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரஸ்பர நன்மைக்காக இந்தியா - ஐக்கிய அரபு அமீரகக் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில், ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய முதலீட்டு நிதியமான எல் இமாத் ஆற்றக்கூடிய முக்கியப் பங்கைத் தலைவர்கள் வரவேற்றனர்.
மேலும், பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி, தொழில்நுட்பம், புத்தாக்கம் உள்ளிட்ட வளர்ந்து வரும் முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
அபுதாபி இளவரசரின் இந்தப் பயணம், இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான நீடித்த உறவுக்கு அடிப்படையாக விளங்குகிறது. அத்துடன் வழக்கமான தலைமை நிலையிலான கலந்துரையாடல் பாரம்பரியத்தை இது மீண்டும் உறுதிப்படுத்தியது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.