“விதிகளை வகுக்கும் சக்தியாக ‘குளோபல் சவுத்’ நாடுகள் மாற வேண்டும்” - பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

“விதிகளை வகுக்கும் சக்தியாக ‘குளோபல் சவுத்’ நாடுகள் மாற வேண்டும்” - பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
Updated on
2 min read

புது டெல்லி: “குளோபல் சவுத் எனப்படும் தெற்கு நாடுகள் உலகளாவிய நெருக்கடிகளில் முன்னணி வரிசையில் நிற்கின்றன, ஆனால், முடிவெடுப்பதில் பின்வரிசையில் உள்ளன. ‘குளோபல் சவுத்’ தெற்கு நாடுகள் விதிகளை வடிவமைக்கும் சக்தியாக மாற வேண்டும்” என பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, "உங்கள் அனைவரையும் இந்தியாவுக்கு வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் தலைமைத்துவம் என்பது மக்கள் மற்றும் மனிதநேயத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது. மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை எங்கள் முன்னுரிமைகளாக இருந்து வருகின்றன.

இந்த ஆண்டு நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாடு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும். நாம் பிரிக்ஸ் அமைப்பின் 20-வது ஆண்டை கொண்டாடுகிறோம். மனித வாழ்க்கையில், இருபது வயது என்பது முதிர்ச்சி மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இன்று, பிரிக்ஸ் அமைப்பும் அத்தகையதொரு முதிர்ச்சி நிலையை எட்டியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில், பிரிக்ஸ் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது.

நாம் ஒருவருக்கொருவரின் கண்ணோட்டங்களுக்கு மதிப்பளித்து, ஒருமித்த கருத்தின் மூலம் முன்னேறிச் செல்கிறோம். நமது அணுகுமுறை யாருக்கும் எதிரானதல்ல. மாறாக, அனைவரையும் உள்ளடக்கிச் செல்வதாகும். அடுத்த 20 ஆண்டுகளுக்கான ஒரு புதிய மற்றும் லட்சியமிக்க செயல்திட்டத்தில் நாம் பணியாற்ற வேண்டும். பிரிக்ஸ் தலைமைப் பதவி ஆண்டுதோறும் சுழற்சி முறையில் மாறினாலும், இது நமது நிறுவன ரீதியான வேகத்தைச் சீர்குலைக்கக் கூடாது.

பிரிக்ஸை வலுப்படுத்தும் அதே வேளையில், உலகளாவிய சீர்திருத்தத்துக்கான ஒரு பாதையையும் நாம் வகுக்க வேண்டும். தற்போதைய உலகளாவிய நிர்வாக அமைப்பு ஒரு பிரமிடு போல உள்ளது. அதிகாரமும் முடிவெடுக்கும் திறனும் அதன் உச்சியில் குவிந்துள்ளன. அதே நேரத்தில் கீழ் அடுக்குகளில் உள்ள நாடுகள் இந்த முடிவுகளால் பாதிக்கப்பட்டாலும், அவற்றை வடிவமைக்க இயலாமல் உள்ளன.

இன்று, குளோபல் சவுத் எனப்படும் தெற்கு நாடுகள் உலகளாவிய நெருக்கடிகளில் முன்னணி வரிசையில் நிற்கின்றன, ஆனால், முடிவெடுப்பதில் பின்வரிசையில் உள்ளன. இந்த 'சிறப்புரிமைகளின் பிரமிடை' நாம் 'கூட்டுறவின் தளமாக' மாற்ற வேண்டும். அதில் ஒவ்வொரு நாட்டுக்கும் குரல் கொடுக்கவும், ஒவ்வொரு உறுப்பினருக்கும் பங்கு இருக்கவும், ஒவ்வொரு முயற்சியின் மையத்திலும் மனிதகுலத்தின் வளர்ச்சி இருக்கவும் வேண்டும். உலகளாவிய தெற்கு நாடுகள் விதிகளை வடிவமைக்கும் சக்தியாக மாற வேண்டும்.

இது தொடர்பாக, உலகளாவிய நிர்வாகச் சீர்திருத்ததுக்கான 10 முன்மொழிவுகளை நாம் கூட்டாக உருவாக்க வேண்டும். அடுத்த உச்சி மாநாட்டுக்குள் அவற்றை ஒரு 'பிரிக்ஸ் சீர்திருத்த வரைபடம்' ஆக வடிவமைக்க வேண்டும் என்றும் நான் முன்மொழிகிறேன்” என்றார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் மற்றும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோர் முன்னிலையில் மோடி இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

இம்மாநாட்டில் அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாக் எல்-சிசி மற்றும் வியட்நாம் பிரதமர் லே மின் ஹங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

“விதிகளை வகுக்கும் சக்தியாக ‘குளோபல் சவுத்’ நாடுகள் மாற வேண்டும்” - பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
பிரிக்ஸ் 2026: பாரத் மண்டபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in