

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள வாராணசியில் கங்கை ஆற்றின் நீர்மட்டம் அபாய எச்சரிக்கை அளவைத் தாண்டிச் செல்கிறது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் அனைத்து படகு சேவைகளையும் நிறுத்தி வைத்ததுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியது. மேலும், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் படித்துறைகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், நீரோட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்றும் நிர்வாகம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், வாராணசி மக்களவைத் தொகுதி எம்.பி.யான பிரதமர் மோடி, வாராணசி நகரில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலவரம் குறித்து, அந்த நகரின் மேயர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிலைமையை கேட்டறிந்தார். மேலும், கோயில் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் பிரதமரிடம் விளக்கினர்.
பொதுமக்களுக்கு பாதிப்பு மற்றும் சிரமம் ஏற்படாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை பிரதமர் வலியுறுத்தினார்.