

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால், ஆங்காங்கே நிலச்சரிவுகளும், சாலை துண்டிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக, மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவின் வெவ்வேறு இடங்களில் மண்ணில் புதைந்து 3 பேர் உயிரிழந்தனர். இடுக்கி மாவட்டம் தொடுபுழா வட்டம் குடயத்தூர் ஊராட்சி அடூர்மலாவில் நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ரவி நாராயணன் என்பவரது வீடு மண்ணுக்குள் புதைந்தது. இதில் இவரது மனைவி சுமதி உயிரிழந்தார். ரவி, அவரது மகன் ரதீஷ் ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
வாகமன் அருகே பிரபாகரன் நாயர் (72), பிரபாகரன் ஆகியோரது வீடு நிலச்சரிவில் சிக்கியது. இதில் இருவரும் உயிரிழந்தனர். உடன் இருந்த உறவினர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். நிலச்சரிவு காரணமாக குட்டிக்கானம்-முண்டக்காயம், அடிமாலி-மூணாறு உள்ளிட்ட பல சாலைகளிலும் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘இடுக்கி மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால், ஆங்காங்கே நிலச்சரிவுகளும், சாலை துண்டிப்புகளும் ஏற்பட்டுள்ளன. மலைச் சாலைகளில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரையிலான இரவு நேரப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையேற்றம், படகுசவாரி உள்ளிட்டவை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அத்தியாவசிய பயணங்களை மட்டும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, வெளியிடங்களில் இருந்து இங்கு சுற்றுலா வருவதை தவிர்க்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும், பேரிடர் மேலாண்மை ஆணையமும் வழங்கும் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நிவாரண முகாம்களை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாறை உடைப்பு மற்றும் சுரங்கப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர காலப் பணிகளுக்காக கிரேன், மண் அள்ளும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன’ என இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேசன் செருவாட் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.