

புதுடெல்லி: டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வாமை இல்லாத மதிய உணவை நேற்று முன்தினம் வழங்கினார்.
ஏஐ உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இந்த மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. மாநாட்டில் பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டின் 4-ம் நாளான நேற்று முன்தினம் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியா குத்தேரஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் மற்றும் கூகுள் நிறுவனத்தின் சுந்தர் கே.பிச்சை, ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட சிஇஓக்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு பாரத் மண்டபத்தில் மதியம் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்து அளித்தார்.
ஒவ்வாமை ஏற்படாத வகையில் பால், கோதுமை அல்லது உலர் கொட்டைகள் இல்லாமல் இவை தயாரிக்கப்பட்டிருந்தன. சர்வதேச பிரதிநிதிகளுக்காக மிகுந்த கவனமுடன் மெனு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அதேவேளையில் நம் நாட்டின் வளமான சமையல் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டுவதாக இது இருந்தது. தினை, பருப்பு, தாமரை தண்டு, பாஸ்மதி அரிசி, குங்குமப்பூ போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு முற்றிலும் சைவ உணவு பரிமாறப்பட்டது.
ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்ட அதே வேளையில் இந்தியாவின் பிராந்திய சுவைகளை விருந்தினர் அனுபவிக்கும் வகையில் இவை தயாரிக்கப்பட்டிருந்தன.
உ.பி. மற்றும் பிஹாரில் பிரபலமான நிமோனா கேபப், காஷ்மீரின் நட்ரு குர்குரி, ஹைதராபாத்தின் ஜாஃப்ரானி சப்ஸ் புலாவ் உள்ளிட்ட உணவுகள் மற்றும் பல வகை சாலட்கள் மற்றும் இனிப்புகள் பரிமாறப்பட்டன.