

புதுடெல்லி: இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள சீஷெல்ஸ் தீவு நாட்டின் 50-வது தேசிய தினம் கடந்த 29-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது அந்த நாட்டின் அதிபர் பாட்ரிக் ஹெர்மினி உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
சீஷெல்ஸ் தீவு ஆமைகளின் புகலிடமாக விளங்குகிறது. இதை நினைவுகூரும் வகையில் உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் தயாரிக்கப்பட்ட வெண்கல ஆமையை சீஷெல்ஸ் அதிபர் பாட்ரிக் ஹெர்மினிக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
அதிபரின் மனைவி வெரோனிகியூவுக்கு மத்திய பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட மகேஸ்வரி பட்டு சால்வை, கர்நாடகாவின் பீதரில் தயாரிக்கப்பட்ட பிட்ரிவேர் பெட்டி ஆகியவற்றை அவர் பரிசாக அளித்தார்.
சீஷெல்ஸ் நாட்டின் துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான செபாஸ்டியன் பிள்ளைக்கு சிக்கிமின் புகழ்பெற்ற ஆர்சிட் ஓவியத்தை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார். துணை அதிபரின் மனைவி லீனா பிள்ளைக்கு காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அவர் பரிசாக அளித்தார்.
மேலும் நீலகிரி தோடர்கள் தயாரித்த பூத்துக்குளி சால்வையை சீஷெல்ஸ் நாடாளுமன்ற சபாநாயகர் அசாரெல் எர்னெஸ்டாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார். இந்தியாவுக்கும் தீவு நாடான சீஷெல்ஸுக்கும் மிக நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 11% பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். இதில் பெரும்பாலானோர் தமிழர்கள் ஆவர்.
சீஷெல்ஸ் நாட்டுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம். அந்த நாட்டில் தரையிறங்கியதும் அவர்களுக்கு சிறப்பு விசா வழங்கப்படுகிறது. சுமார் 150 தீவுகளை கொண்ட சீஷெல்ஸ் நாட்டுக்கு 6 அதிநவீன ரேடார்களை இந்தியா வழங்கி உள்ளது. வர்த்தகம், பாதுகாப்பில் இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக சீஷெல்ஸ் விளங்குகிறது.