“பிரிக்ஸ் மாநாட்டில் உலக நலனுக்கான ஆக்கப்பூர்வ விவாதங்கள்” - பிரதமர் மோடி நம்பிக்கை

“பிரிக்ஸ் மாநாட்டில் உலக நலனுக்கான ஆக்கப்பூர்வ விவாதங்கள்” - பிரதமர் மோடி நம்பிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: இரண்டு நாள் பிரிக்ஸ் உச்சி மாநாடு புதுடெல்லியில் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த மாநாட்டில் உலக நலன்களுக்கான ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடைபெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை தொடங்க உள்ளது. இந்தியா தலைமையில் நடைபெற உள்ள இந்த உச்சி மாநாட்டில், பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, ஈரான், ரஷ்யா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 11 வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகள் பங்கேற்க உள்ளன.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா, எகிப்து அதிபர் அல் சிசி, இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், அபுதாபி இளவரசர் ஷேக் கலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி உள்ளிட்ட தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியெய்ரா, சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத் தன்மைக்கான கட்டமைப்பு என்ற கருப்பொருளைக் கொண்டுள்ள இந்த உச்சி மாநாடு, அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய நிர்வாகம் மற்றும் பலதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் என்ற தலைப்பிலான அமர்வுடன் நாளை தொடங்குகிறது. பாரத் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் கண்காட்சியை தலைவர்கள் பார்வையிட உள்ளார்கள். அவர்கள் கூட்டாக மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியிலும் பங்கேற்க இருக்கிறார்கள்.

தொடர்ந்து பிரதமர் மோடி அளிக்கும் சிறப்பு விருந்து நடைபெறும். உச்சி மாநாட்டுக்கு இடையே, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், ‘நாளை தொடங்க உள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்காக உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் புதுடெல்லியில் கூடுகிறார்கள். உலக நலனை முதன்மை நோக்கமாகக் கொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான, அர்த்தமுள்ள விவாதங்கள் இந்த மாநாட்டில் நடைபெறும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“பிரிக்ஸ் மாநாட்டில் உலக நலனுக்கான ஆக்கப்பூர்வ விவாதங்கள்” - பிரதமர் மோடி நம்பிக்கை
"காஷ்மீரிகளை சிறையில் அடைக்க விரும்புகிறதா காங்கிரஸ்?” - ‘வந்தே மாதரம்’ விவகாரத்தில் உமர் அப்துல்லா கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in