

ரேபரேலி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது மக்களவை தொகுதியான ரேபரேலிக்கு நேற்று சென்றார்.
அங்கு கட்சித் தொண்டர்களிடையே அவர் கூறியதாவது: மத்திய அரசு ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்' பெயரை மாற்றியதன் மூலம் அந்தத் திட்டத்தை அவமதித்துள்ளது. மிக முக்கியமாக, விளிம்புநிலை மக்களுக்கு இத்திட்டம் வழங்கி வந்த பாதுகாப்பை அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது ஜனநாயகத்தின் வேர்கள் மீதான தாக்குதலாகும். இதன் மூலம் இந்த திட்டத்தை பிரதமர் மோடி சீர்குலைக்கிறார்.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தைப் பாதுகாக்க காங்கிரஸ் நாடு தழுவிய இயக்கத்தை நடத்தி வருகிறது. நாங்கள் தொழிலாளர்களின் பக்கம் நிற்கிறோம், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதியுடன் இருக்கிறோம்.
ஆனால், நாட்டின் செல்வம் முழுவதும் கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகிய இரு தொழிலதிபர்களின் கைகளில் மட்டுமே குவிய வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, ரேபரேலியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.