

கேரளாவின் திருவல்லா நகரில் நேற்று பாஜக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். படம்: பிடிஐ
திருவனந்தபுரம்: கேரளாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவல்லா நகரில் பாஜக சார்பில் நேற்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: மார்க்சிஸ்ட் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி ஆகியவை கேரளாவில் அடுத்தடுத்து ஆட்சி அமைத்து வருகின்றன.
ஆனால், இரு கூட்டணிகளும் மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை. பாஜக ஆளும் பிற மாநிலங்களை ஒப்பிடும் போது கேரளா மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து தங்கம் திருடப்பட்டு உள்ளது. இதில் மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களுக்குத் தொடர்பு இருக்கிறது. நாங்கள் ஆட்சி அமைக்கும் போது அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
மேற்கு ஆசிய போர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகிறது. மேற்கு ஆசிய நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள், மேற்கு ஆசிய நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம் குறித்து காங்கிரஸுக்கு துளியும் அக்கறை இல்லை. ஒட்டுமொத்த மேற்கு ஆசிய நாடுகளும் இந்தியாவை எதிரியாக கருதும் வகையில் அந்த கட்சி மோசமான கருத்துகளை கூறி வருகிறது.
மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளுடனும் மத்திய அரசு மிக நெருங்கிய நட்புறவை பேணி வருகிறது. இதன் காரணமாக அந்த நாடுகள், இந்தியர்களைத் தங்களது குடும்ப உறுப்பினர்களாகக் கருதுகின்றன. அவர்களின் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன.
எனவே, மேற்கு ஆசியாவில் வாழும் இந்தியர்களின் நலன்களை கருத்தில் கொண்டு காங்கிரஸ் செயல்பட வேண்டும் என்று கண்டிப்புடன் அறிவுறுத்துகிறேன்.
ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு, காங்கிரஸ் கூட்டணி மீது கேரள மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். எனவே வரும் கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கடந்த மார்ச் 29-ம் தேதி பாலக்காடு, திருச்சூர் பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார். இதைத் தொடர்ந்து திருவல்லா மற்றும் திருவனந்தபுரத்தில் அவர் நேற்று தீவிர பிரச்சாரம் செய்தார்.