

கேரள சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திருச்சூரில் நேற்று நடைபெற்ற சாலைப் பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடி. உடன் இணையமைச்சர் சுரேஷ் கோபி.
பாலக்காடு: கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாலக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
கேரள மாநில அரசியலில் தற்போது ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பாஜக மற்றும் என்டிஏகூட்டணியின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். தொண்டர்களின் அயராத உழைப்பு, அவர்களின் தியாகம் மற்றும் மக்களின் ஆசி ஆகியவற்றின் மூலமே கேரளத்தில் இந்த மாற்றம் சாத்தியமாகியுள்ளது.
நீண்டகாலமாக ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டி.எஃப்) மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) ஆகிய கூட்டணிகளின் சுயநல அரசியலில் கேரள மாநிலம் சிக்கித் தவிக்கிறது.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வெளியில் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக் கொண்டாலும், உண்மையில் அவர்கள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள். இந்தத் தேர்தலில் அவர்களுக்கு உண்மையான சவாலாகத் திகழ்வது பாஜக மட்டுமே.
கேரளத்தின் கடன் சுமை தற்போது ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் மூன்று மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது.
ஊழல்வாதிகளிடம் இருந்து பணத்தை மீட்டு, அதனை மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு என்டிஏ அரசு பயன்படுத்தும். மக்களின் முழுமையான ஆதரவுடன் கேரளத்தில் நிச்சயம் நாங்கள் ஆட்சியமைப்போம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.