

டெல்லியில் நேற்று நடைபெற்ற ‘நாரி சக்தி வந்தன்’ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். உடன் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி உள்ளிட்டோர் உள்ளனர்.படம்: பிடிஐ
புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை அமல்படுத்துவதற்காகப் பல தசாப்தங்களாக நிலவும் காத்திருப்புக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய சரியான தருணம் வந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார். நாட்டின் உயரிய சட்டமியற்றும் அமைப்பான நாடாளுமன்றம் ஒரு புதிய சரித்திரத்தைப் படைக்கும் தருவாயில் இருப்பதாக கூறிய அவர், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏப்ரல் 16, 17, 18-ம் தேதிகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில், டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்ற ‘நாரி சக்தி வந்தன் சம்மேளனம்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இதுகுறித்து மேலும் பேசியதாவது: நாடாளுமன்றத்தைக் கூட்டி மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்காக எடுத்த இந்த முடிவு பெண் சக்தியைப் போற்றுவதற்காக எடுக்கப்பட்ட முடிவாகும். இது பெண் சக்திக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
நமது நாடாளுமன்றம் ஒரு புதிய வரலாற்றைப் படைக்க தயாராகிவிட்டது. இது கடந்த கால கனவுகளை நனவாக்குவதுடன், வருங்காலத்தின் தீர்மானங்களையும் நிறைவேற்றும். சமூக நீதி என்பது வெறும் முழக்கமாக இல்லாமல், நமது பணிப் பண்பாட்டிலும், முடிவெடுக்கும் செயல்முறையிலும் இயல்பான அங்கமாக இருப்பவை. சமத்துவ இந்தியாவைப் படைப்பதே எங்களது நிலைப்பாடு ஆகும்.
சட்டப்பேரவைகள் முதல் நாடாளுமன்றம் வரை பல தசாப்தங்களாகத் தொடரும் மகளிர் இடஒதுக்கீட்டுக்கான காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய சரியான தருணம் வந்துவிட்டது. நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, 21-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றை இந்தியா எடுக்க தயாராகிவிட்டது.
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு இரண்டு முக்கியத் திருத்தங்களை செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘நாரி சக்தி வந்தன் சட்டம்’, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்குப் பின்னரே அமலுக்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையிலேயே இடஒதுக்கீட்டை முன்னெடுத்துச் செல்ல மத்திய அரசு தற்போது திட்டமிட்டுள்ளது.
இந்தியப் பெண்கள் குடியரசுத் தலைவர் முதல் பிரதமர் பதவி வரை அலங்கரித்து, தங்களுக்கென தனித்துவமான பாரம்பரியத்தை நிலைநாட்டி உள்ளனர். இப்போதும் குடியரசுத் தலைவர், நிதி அமைச்சர் போன்ற முக்கியப் பொறுப்புகளைப் பெண்கள் திறம்பட நிர்வகித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர்.
2023-ல் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 2029-ம் ஆண்டுக்குள் இதை அமல்படுத்த வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாகவும் இருந்தது. பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு மற்றும் அனைவரது பங்களிப்புடன் இம்முறை இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதே எங்களது முன்னுரிமை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
காங்கிரஸ் கொறடா உத்தரவு: இதற்கிடையே, மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்கான நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஒரு சுற்றறிக்கைவெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மக்களவையில் ஏப்ரல் 16, 17, 18 (வியாழன், வெள்ளி, சனி) ஆகிய நாட்களில் மிக முக்கியமான விவகாரங்கள், விவாதம் வாக்கெடுப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
எனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் இந்த மூன்று நாட்களும் காலை 11 மணி முதல் அவை ஒத்திவைக்கப்படும் வரை சபையில் தவறாமல் இருக்க வேண்டும்.
அவையில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வர உள்ள முக்கிய மசோதாக்கள் மீதான விவாதத்தின் போது கட்சியின் பலத்தை நிரூபிக்கவும், ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.