

புதுடெல்லி: அதிக எடை கொண்ட அமெரிக்க செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியதற்காக இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: எல்விஎம்3 ராக்கெட்டின் வெற்றி, உலகளாவிய ராக்கெட் வர்த்தக சந்தையில் இந்தியா வளர்ந்து வருவதை மீண்டும் நிரூபித்துள்ளது. இந்தியாவிலிருந்து மிக அதிக எடை கொண்ட அமெரிக்க செயற்கைக்கோள் ப்ளூபேர்ட் பிளாக்-2 அதற்குரிய புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது, இந்திய விண்வெளி பயணத்தில் பெருமையான தருணம். அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை ஏவும் இந்தியாவின் திறனை இது வலுப்படுத்தியுள்ளது. கடினமாக உழைத்த விண்வெளி விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துகள்.
இந்திய இளைஞர்களின் சக்தியால், நமது விண்வெளி திட்டம் மேலும் மேம்படும். எல்விஎம்3 ராக்கெட் ஏவுதல் மூலம் நாம் நமது எதிர்கால ககன்யான் திட்டத்தையும் வலுப்படுத்துகிறோம். நமது திறன் மேம்பாடு, தன்னம்பிக்கைக்கான ஊக்குவிப்பு ஆகியவை வரும் தலைமுறையினருக்கு மிகச் சிறப்பானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில், “எல்விஎம்3-எம்6 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியதற்காக இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துகள். உலகம் முழுவதும் தகவல் தொடர்பை மேம்படுத்த அமெரிக்க செயற்கைக்கோள் புளூபேர்ட் பிளாக்-2 விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது நமது விஞ்ஞானிகளின் திறமையை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவின் விண்வெளி திறன் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. விண்வெளி தொழில்நுட்பத்தின் உலகளாவிய மையமாக இந்தியா மாற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டம் நிறைவேறியுள்ளது’’ என பதிவிட்டுள்ளார்.