

மும்பை: டிஜிட்டல் கைது என்று கூறி மும்பையைச் சேர்ந்த 85 வயது முதியவரிடம் ரூ.9 கோடியை பறித்த கும்பல் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையின் தாக்குர்ட்வார் பகுதியில் வசித்து வருகிறார் 85 வயது முதியவர் ஒருவர். இவரது மகள் அமெரிக்காவில் வசிக்கிறார். கடந்த நவம்பர் 28-ம் தேதி செல்போனில் முதியவருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தன்னை தீபக் சர்மா என்றும், நாசிக்கில் அமைந்துள்ள பஞ்சவடி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் என்றும் அறிமுகமாகியுள்ளார். அப்போது அவர் கூறும்போது அந்த முதியவர் பேரில் ஆதார் அட்டை எண்ணைக் கொண்டு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதில் இருந்து தடை செய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஏராளமான பணம் அனுப்பியுள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்தார். விசாரணைக்கு ஒத்துழைத்தால், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து விடலாம் என்ற ரீதியில் பேசியுள்ளார்.
தற்போது முதியவரை டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும், இதை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்றும் அந்த நபர் கூறியுள்ளார். இதையடுத்து பயந்து போன அந்த முதியவர் தனது வங்கிக் கணக்கு விவரங்கள், இருப்பு விவரங்கள், பங்குச்சந்தை முதலீடு, மியூச்சுவல் பண்ட் முதலீடு, நிரந்தர வைப்பு முதலீட்டு விவரங்களை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த மர்ம நபர்கள் உச்ச நீதிமன்றம், ஆர்பிஐ பெயரில் போலியான ஆவணங்களை அனுப்பி அவரை மிரட்டியுள்ளனர். இந்த வழக்கிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றால், முதலீடு செய்த பணத்தை தங்களுக்குத் தந்துவிடவேண்டும் என்று மிரட்டியுள்ளனர். அந்த தொகை அனைத்தையும் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யவேண்டும் என்றும் விசாரணை முடிந்த பின்னர் பணம் திருப்பித் தரப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து ரூ.9 கோடி பணத்தை ஆர்டிஜிஎஸ் மூலமாக அந்த முதியவர் கடந்த டிசம்பர் 17-ம் தேதி அனுப்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 22-ம் தேதி, மேலும் ரூ.3 கோடியை அனுப்பவேண்டும் என்று மர்ம நபர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கிர்காவ்ன் பகுதியிலுள்ள பாங்க் ஆஃப் இந்தியா கிளைக்கு முதியவர் சென்றுள்ளார். அப்போது, சந்தேகம் அடைந்த வங்கி ஊழியர்கள் அந்தப் பணத்தை அனுப்புவதை நிறுத்தி, அவரின் உறவினர்களிடம் பேசுமாறு கூறியுள்ளனர். அப்போது தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.
இதையடுத்து அவர் சைபர்கிரைம் ஹெல்ப்லைன் எண்ணான 1930-ல் புகார் செய்துள்ளார். இதையடுத்து சைபர்கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.