

லக்னோ: உத்தர பிரதேசத்தில் ரூ.36,230 கோடி செலவில் 12 மாவட்டங்களை இணைத்து 594 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள கங்கா எக்ஸ்பிரஸ் சாலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
உத்தர பிரதேசத்தில் 594 கி.மீ. தூரத்துக்கு கங்கா எக்ஸ்பிரஸ் 6 வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.36,230 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த 6 வழிச் சாலை மீரட்டிலிருந்து, பிரயாக்ராஜ் வரை 12 மாவட்டங்களை இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் 120 கிமீ வேகத்தில் செல்லலாம்.
இந்த விரைவுச் சாலை மூலம் மீரட் - பிரயாக்ராஜ் பயண நேரம் 10 முதல் 12 மணி நேரத்திலிருந்து 6 முதல் 8 மணி நேரமாக குறைந்துள்ளது. ஷாஜகான்பூரில் உள்ள இந்த நெடுஞ்சாலையில் 3.5 கி.மீ தூரம் அவசரகால விமான ஓடுதளம் போல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையின் 4-ல் 3 பகுதியை அதானி குழுமம் அமைத்துள்ளது. தொழில் வளர்ச்சியை மையமாக வைத்து இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த 6 வழிச்சாலையை வருங்காலத்தில் 8 வழிச்சாலையாகவும் விரிவுபடுத்த முடியும்.
இதை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். உ.பி. ஹர்தோய் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் கங்கா எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் மிக நீளமான பசுமைவழி விரைவுச் சாலையான கங்கா விரைவுச் சாலை ஐந்தாண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதுதான் தற்போதைய அரசின் வேகமான செயல்பாடு. மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த விரைவுச்சாலை திட்டம் போக்குவரத்தை மேம்படுத்துவதோடு, உத்தரப் பிரதேசம் முழுவதும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
கங்கை நதி, உத்தரப் பிரதேசத்திற்கும், நாட்டிற்கும் வாழ்வாதாரமாக இருப்பதுபோல், இந்த விரைவுச் சாலை உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சியின் புதிய வாழ்வாதாரமாக மாறும். சமீபத்தில், டெல்லி- டேராடூன் விரைவுச் சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தேன். வளர்ந்து வரும் இந்தியாவின் விதியை வடிவமைக்கும் உயிர் நாடிகளாக இந்த விரைவுச் சாலைகள் உருவாகி வருகின்றன.
இந்த விரைவுச் சாலை புனிதத் தலங்களுக்கான பயண நேரத்தை ஒரு சில மணிநேரங்களாகக் குறைக்கும். ஒரு காலத்தில் பின்தங்கிய மாநிலமாக இருந்த உத்தரபிரதேசம், தற்போது டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறி வருகிறது. உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி வளர்ச்சிக்கு எதிரானதாக மட்டும் அல்லாமல், பெண்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது.
இண்டியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக சமீபத்தில் வாக்களித்ததை நாடு பார்த்தது. மகளிர் இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா நிறைவேறியிருந்தால், 2029-ல் மக்களவையிலும், சட்டப்பேரவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைத்திருக்கும். தொகுதி மறுவரையறை மூலம் உத்தரப் பிரதேசத்துக்கு அதிக தொகுதிகள் கிடைப்பதற்கு எதிராக தமிழகத்தின் திமுக செயல்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.