

திருவனந்தபுரம்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அண்மையில் கேரள மாநிலம் கொச்சியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறும்போது, “தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அந்த ஆட்சியில் ஊழல் மிகுந்திருந்தது.
சந்திரசேகர ராவை போன்றே கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஆட்சி நடத்துகிறார். அவரது ஆட்சியில் ஊழல் அதிகமாக உள்ளது" என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சிலர் தவறாக வழிநடத்தி உள்ளனர். அதனால் அப்படி பேசியிருக்கிறார்.
இதன் காரணமாகவே அவர் கேரளா குறித்து எதிர்மறையாக பேசியிருக்கிறார். இந்தியாவில் ஊழல் குறைந்த மாநிலங்களில் ஒன்றாக கேரளம் திகழ்கிறது. வளர்ச்சி சார்ந்த நிதி ஆயோக் பட்டியலில் கேரளம் 79 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. தெலங்கானா 6-வது இடத்தில் மட்டுமே இருக்கிறது. கேரளத்தில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 5 குழந்தைகள் மட்டுமே உயிரிழக்கின்றன.
இதில் அமெரிக்காவை விட நாங்கள் முன்னேறிய நிலையில் இருக்கிறோம். ஆனால் தெலங்கானாவில் குழந்தைகள் உயிரிழப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்தியர்களின் சராசரி ஆயுளைவிட கேரள மக்களின் ஆயுள் 7 ஆண்டுகள் அதிகமாக உள்ளது. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கேரளாவிடம் இருந்து நிறைய பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். அவரை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.