

புதுடெல்லி: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் கர்நாடகா உட்பட நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் இ20 பெட்ரோல் நிர்ணயிக்கப்பட்ட தர நிலைகளுக்கு உட்பட்டே இருப்பதாக பெட்ரோலிய அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை 20% எத்தானல் கலந்த இ20 பெட்ரோலை விநியோகம் செய்து வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள சில சில்லறை விற்பனை நிலையங்களில் விற்கப்படும் எரிபொருளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எத்தனால் இருப்பதாக கர்நாடக அரசு குற்றம் சாட்டி இருந்தது. இந்நிலையில், இதனை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நிராகரித்துள்ளது.
27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சேகரிக்கப்பட்ட 893 மாதிரிகள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலையை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ள பெட்ரோலிய அமைச்சகம் இவற்றில் 56 மாதிரிகள் கர்நாடகாவைச் சேர்ந்தவை என கூறியுள்ளது. கர்நாடகாவில் பரிசோதிக்கப்பட்ட அனைத்து 56 மாதிரிகளும் 'IS 17021' தரநிலைகளுக்கு உட்பட்டவை என்றும், அவற்றில் எத்தனால் அளவு 19 முதல் 20 சதவீதம் வரை இருந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மூன்று எண்ணெய் நிறுவனங்களும் தாங்கள் விநியோகிக்கும் எரிபொருள் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு சட்டப்பூர்வ மற்றும் தொழில்நுட்ப நடைமுறைகளின்படி நடத்தப்பட்ட சோதனைகளில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தன.
மேலும், கர்நாடக அரசிடம் உள்ள மாதிரி சேகரிப்பு தொடர்பான ஆவணங்கள் மற்றும் விற்பனை நிலைய வாரியான ஆய்வக அறிக்கைகள் மற்றும் கண்டறியப்பட்ட முடிவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட சோதனை முறைகள் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மூன்று எண்ணெய் நிறுவனங்களும் மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளன.