

கோப்புப்படம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பல மாவட்டங்களில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பான வதந்தி காரணமாக மக்கள் பதற்றத்தில் அதிகளவில் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கி குவிப்பதை காண முடிந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்ட ஆட்சியர் பகவான் சிங் உய்கே நேற்று முன்தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ‘‘எரிபொருள் இருப்பு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.300-க்கு அதிகமாகவும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.1,000-க்கு அதிகமாகவும் பெட்ரோல் வழங்கக் கூடாது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பேரல்கள், பாட்டில்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்கக் கூடாது. அதேநேரம் ஆம்புலன்ஸ்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
எனினும், 4 சக்கர வாகனங்களுக்கான இந்த கட்டுப்பாடு திரும்பப் பெறப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிறகு தெரிவித்தார்.