

புதுடெல்லி: கடந்த 2003-ம் ஆண்டில் ஆந்திராவில் இந்து மத சம்பிரதாயங்களின்படி ஒரு தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு இந்த தம்பதி பிரிட்டனில் குடியேறினர். சில ஆண்டுகளுக்குப் பிறகு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டில் மனைவி மட்டும் ஆந்திராவுக்கு திரும்பினார். இதன்பிறகு ஆந்திர நீதிமன்றத்தில் விவாகரத்து பெற கணவர் தீவிர முயற்சி செய்தார். ஆனால் அவரது முயற்சி பலன் அளிக்கவில்லை.
பிரிட்டனில் மருத்துவராகப் பணியாற்றிய கணவர் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரியில் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றார். இதை அடிப்படையாக வைத்து பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெற்றார். இதன்பிறகு பிரிட்டனில் அவர் 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக முதல் மனைவி சார்பில் ஆந்திர போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் கணவர், அவரது பெற்றோர் மற்றும் 2-வது மனைவி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கணவர் தரப்பில் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஸ்ரீ சந்திர சேகர் அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் வெளிநாட்டு நீதிமன்றங்களில் விவாகரத்து பெற முடியாது. ஒருவேளை வெளிநாட்டில் விவாகரத்து பெற்றாலும் இந்திய சட்டப்படி முதல் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக கருதப்படாது. வெளிநாட்டில் விவகாரத்து பெற்று 2-வது திருமணம் செய்து கொண்டால் இந்திய சட்டப்படி குற்றமாகவே கருதப்படும். அவர்கள் வெளிநாட்டு குடியுரிமையை பெற்றிருந்தாலும், இந்திய சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
தற்போதைய வழக்கில் கணவருக்கு எதிரான சட்ட நடவடிக்கையை மட்டும் தொடரலாம். அவரது பெற்றோர், 2-வது மனைவி மீதான குற்றவியல் நடவடிக்கையும் ரத்து செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்து உள்ளனர்.