

புது டெல்லி: ரகசிய உறவு, சீன உளவு சர்ச்சையின் எதிரொலியால், என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவியை இருந்து ஜென்சன் ஹுவாங் ராஜினாமா செய்துள்ளார்.
ஜென்சன் ஹுவாங் 33 ஆண்டுகளுக்கு முன்பு இணை நிறுவனராக, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு வித்திட்ட 4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள சிப் தயாரிப்பு நிறுவனமான என்வியியா-வின் சிஇஓ பதவியிலிருந்து அவர் விலகியுள்ளார். இதையடுத்து, அந்நிறுவத்தின் தலைமை நிதி அதிகாரி கோலெட் கிரெஸ் இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
"கோலெட் மற்றும் தலைமைத்துவக் குழுவின் மீது இயக்குநர்கள் குழுவுக்கு முழு நம்பிக்கை உள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாடுகள், வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் தயாரிப்புத் திட்டங்கள் ஆகியவை எந்த இடையூறும் இன்றித் தொடரும்" என்று என்விடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் ஹார்வி ஜோன்ஸ் கூறினார்.
பின்னணி என்ன? - செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கான சிப்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக அமெரிக்காவின் என்விடியா உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு செய்தியில், என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சென் ஹுவாங்குக்கும் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதாக தகவல் வெளியானது.
இதன் தொடர்ச்சியாக, ஆலிஸ் ஹுவாங்குடன் தனக்கு இருந்த ரகசிய உறவை ஜென்சென் ஹுவாங் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இதற்காக தனது மனைவி லோரி ஹுவாங் மற்றும் குழந்தைகளிடமும் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த 8-ம் தேதி தனது நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ‘எனது செயல் என் மனைவி மற்றும் குழந்தைகளை புண்படுத்தி இருக்கும். இதற்காக மிகவும் வருந்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
ஆலிஸ் ஹுவாங் சீன உளவாளி என்பதும் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட மெகாஸ்பீடு நிறுவனம் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சகத்துடன் அவர் இணைந்து செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. சீனாவுக்கு சில சிப்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், மெகாஸ் பீடு நிறுவனம் மூலம் என்விடியா சிப்கள் சீனாவுக்கு சென்றுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக ஆலிஸ் சீன உளவாளியாக செயல்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான சிப்களை என்விடியா நிறுவனத்திடம் இருந்து சீன நிறுவனங்கள் பெற்றுள்ளதாக 'தி இன்ஃபர்மேஷன்' செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக, தடை செய்யப்பட்ட 2.4 லட்சம் சிப்கள் (ஹெச்100, ஹெச்200) சீனாவுக்கு கொண்டுசெல்ல ஆலிஸ் உதவியதாகக் கூறப்படுகிறது. ஆலிஸ், தனது சகோதரி மற்றும் கணவருடன் இணைந்து, என்விடியா சிப்களைப் பெறுவதற்காக சீனா மற்றும் சிங்கப்பூர் முழுவதும் நிறுவனங்களின் வலையமைப்பை உருவாக்கியதும் தெரியவந்துள்ளது.
ஆலிஸ் ஹுவாங்குடனான தொடர்பை ஒப்புக்கொண்டு நவம்பர் 8-ம் தேதி ஊழியர்களுக்கு ஜென்சன் ஹுவாங் மின்னஞ்சல் அனுப்பியதிலிருந்து, பங்குச்சந்தையில் என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 600 பில்லியன் டாலர்கள் வரை சரிந்துள்ளது. இதனிடையே என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கிற்கு, சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங்கை அறிமுகப்படுத்தி வைத்ததே ஆலிஸின் கணவரும் சீனத் தொழிலதிபருமான காங் வெய் தான் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது கவனிக்கத்தக்கது.