

புதுடெல்லி: தென் பெண்ணையாறு நீர் பங்கீட்டு தீர்ப்பாயம் அமைக்க வேண்டுமென்று வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
காவிரி நதிக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் இரண்டாவது பெரிய நதி தென் பெண்ணையாறாகும். இந்த நதி கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகி தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது.
இந்த, தென் பெண்ணையாற்றின் கிளை நதியான மார்க்கண்டேயா நதியின் குறுக்கே “யர்கோல்” என்ற பகுதியில், கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அந்தப் பகுதியில் அணை கட்டப்பட்டால் கீழ் பாசன மாநிலமான தமிழகத்துக்கு நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
இது ஆற்று நீரை நம்பி இருக்கும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டியும், கர்நாடக அரசு விதிகளை மீறி செயல்படுவதாகவும், எனவே அணை கட்டுவதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகம் மற்றும் கர்நாடகா இடையேயான தென் பெண்ணையாறு நீர் பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை குழுவை அமைக்குமாறு கடந்த 2024 ஜனவரி மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, மத்திய நீர்வள ஆணையத் தலைவர் தலைமையில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் அடங்கிய 9 பேர் கொண்ட குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டது. இக்குழுவின் கூட்டம் கடந்த 2024 அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெற்ற நிலையில் கூட்டத்தில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் தென் பெண்ணையாறு வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘நீர் பங்கீடு குறித்து தீர்வு காண்பதற்காக குழு அமைக்கப்பட்டு, இரண்டு கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் அது தோல்வியடைந்து விட்டது. எனவே மத்திய அரசு நடுவர் மன்றம் அமைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கைக்கு கர்நாடக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில், நீர் பங்கீடு விவகாரத்தில் ஒரு இறுதி முடிவை எட்ட மத்திய அரசு உதவுவதற்கு தயாராக இருந்தும் இரு மாநில அரசுகளும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறியது. இதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டு கடந்த பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். அதில், மத்திய அரசு ஒரு மாத காலத்திற்குள் தென் பெண்ணையாறு நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான தீர்ப்பாயத்தை அமைத்து, அதிகாரப்பூர்வமாக அரசு இதழில் அறிவிப்பை வெளியிட வேண்டுமென ஆணையிட்டது.
ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கூடுதலாக கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனு கடந்த மே மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு தீர்ப்பாயம் அமைக்க 6 மாத காலம் மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
இந்நிலையில், நீர் பங்கீட்டு தீர்ப்பாயம் அமைக்க வேண்டுமென்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது. இந்த மறுஆய்வு மனு ஜூலை 14ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சேம்பரில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கு எந்த ஒரு முகாந்திரமும் காண இயலவில்லை என தெரிவித்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.