மாநிலங்களவை தலைவராக தனது பணியைத் தொடங்கிய சி.பி.ராதாகிருஷ்ணன்

மாநிலங்களவை தலைவராக தனது பணியைத் தொடங்கிய சி.பி.ராதாகிருஷ்ணன்

“எல்லா உறுப்பினர்களிடமும் நியாயமாக நடந்து கொள்வீர்!” - சி.பி.ஆருக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Published on

புதுடெல்லி: மாநிலங்களவையின் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தனது பணியை இன்று தொடங்கிய நிலையில், அவர் அவையை சுமுகமாகவும் ஆரோக்கியமாகவும் நடத்த வேண்டும் என்றும், அனைத்து உறுப்பினர்களிடமும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

மக்களவையில் அமளி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும், விஜய் குமார் மல்ஹோத்ரா, ரவி நாயக், மறைந்த நடிகர் தர்மேந்திரா, கர்னல் (ஓய்வு) சோனா ராம் சவுத்ரி ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, அவை சமுகமாக நடைபெற ஒத்துழைக்குமாறு கோரிக்கை வைத்தார். எனினும், அமளி நீடித்ததால் அவை முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அவை 12 மணிக்கு மீண்டும் கூடியதும் மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அமளிக்கு மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மூன்று மசோதாக்களை அறிமுகப்படுத்தினார். புகையிலை மற்றும் அது தொடர்புடைய பொருட்களுக்கு கலால் வரி விதிக்க மத்திய கலால் (திருத்தம்) மசோதா 2025-ஐ நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார். அடுத்ததாக, பான் மசாலா போன்ற பொருட்களின் உற்பத்திக்கு செஸ் விதிக்க சுகாதார பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் மசோதா 2025-ஐ நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார்.

மூன்றாவதாக, மணிப்பூர் ஜிஎஸ்டி 2017-ஐ திருத்துவதற்காக மணிப்பூர் ஜிஎஸ்டி (இரண்டாவது திருத்தம்) திருத்த மசோதா 2025-ஐ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார்.

<div class="paragraphs"><p>மாநிலங்களவை தலைவராக தனது பணியைத் தொடங்கிய சி.பி.ராதாகிருஷ்ணன்</p></div>
300 பேர் பலி; 400+ மாயம்: இலங்கையில் டிட்வா விட்டுச் சென்ற பேரழிவுத் தடங்கள்!

எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை நடத்திய சந்தியா ரே, அவையை பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார். அவை 2 மணிக்குக் கூடியபோது மீண்டும் அமளி தொடர்ந்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் வாழ்த்து: மாநிலங்களவை, அதன் புதிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. அவை கூடியதும் தேசிய மாநாட்டுக் கட்சியின் குர்விந்தர் சிங் ஓபராய், சவுத்ரி முகமது ரம்ஜான், சஜ்ஜாத் அகமது கிச்லூ ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

இதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை வரவேற்று வாழ்த்து தெரிவிக்கும் சம்பிரதாய நிகழ்வு தொடங்கியது. முதலில் பேசிய பிரதமர் மோடி, சி.பி.ராதாகிருஷ்ணன் எளிய பின்னணியில் இருந்து மாநிலங்களவையின் தலைவராக உயர்ந்திருப்பது நாட்டின் ஜனநாயகத்தின் வலிமையை நிரூபிப்பதாகக் குறிப்பிட்டார். சி.பி.ராதாகிருஷ்ணனை நீண்ட காலமாக தனக்குத் தெரியும் என்றும், சமூக சேவையில் அவர் மிகுந்த நாட்டம் கொண்டவர் என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து அவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் கார்கே, சி.பி.ராதாகிருஷ்ணனை வாழ்த்தி வரவேற்றதோடு, முன்னாள் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு பிரியா விடை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டினார். இதனால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

கார்கேவைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “புதிய அவைத் தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டிய, வரவேற்க வேண்டிய நிகழ்வு இது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் கார்கே, தேவையின்றி ஜக்தீப் தன்கர் விவகாரத்தை எழுப்பியுள்ளார். இதன்மூலம் அவர் முந்தைய அவைத் தலைவரை அவமதித்துள்ளார். தொடர்பில்லாத விஷயங்களை அவையில் எழுப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

அதிமுக, பிஜூ ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் சி.பி. ரதாகிருஷ்ணனை வாழ்த்து உரையாற்றினர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும், அவை சுமுகமாகவும் ஆரோக்கியமாகவும் நடப்பதை அவைத் தலைவர் உறுதி செய்ய வேண்டும் என்றும், அனைத்து உறுப்பினர்களிடமும் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

<div class="paragraphs"><p>மாநிலங்களவை தலைவராக தனது பணியைத் தொடங்கிய சி.பி.ராதாகிருஷ்ணன்</p></div>
மாநிலங்களவையில் ஜக்தீப் தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கே: பாஜக எதிர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in