

இடைநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் காகிதங்களை வீசி எறிந்தனர்.
புதுடெல்லி: இந்திய - சீன மோதலின்போது, சீனாவின் டாங்குகள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக முன்னாள் ராணுவத் தளபதி நரவணே தனது நூலில் கூறி இருப்பது உண்மை என்று மக்களவையில் ராகுல் காந்தி கூறியதற்கு ஆளும் கூட்டணி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் இன்றும் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘‘சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக முன்னாள் ராணுவத் தளபதி நரவணே தெரிவித்த கருத்துக்களை தெரிவிக்க முடியாமல் நான் தடுக்கப்பட்டேன். நரவணேவின் சுயசரிதை தொடர்பான அந்த கட்டுரையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை நான் உறுதிப்படுத்தி உள்ளேன். அந்தக் கட்டுரை எனக்குத் தெரிந்து சரியானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நான் கையொப்பமிட்ட அந்தக் கட்டுரையின் நகலை சமர்ப்பித்துள்ளேன். அந்தக் கட்டுரை மிகவும் முக்கியமானது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது...’’ என பேசினார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சபாநாயகரின் அனுமதி பெற்று ராகுல் காந்தி இது குறித்துப் பேச வேண்டும் என வலியுறுத்தினார்.
அதற்கு ராகுல் காந்தி, ‘‘நான் இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர். யாருடைய அனுமதியும் எனக்குத் தேவையில்லை’’ என கூறினார்.
அதற்கு கிரண் ரிஜிஜு, ‘‘யாராக இருந்தாலும் சபாநாயகரிடம் அனுமதி பெற்றே பேசுகிறார்கள். சபாநாயகரின் அனுமதி இன்றி யாரும் பேசுவதில்லை’’ என குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘உறுதிப்படுத்தப்படாத ஆவணங்களை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த சட்ட விதிகளில் இடம் இல்லை. எனவே, அது குறித்து நீங்கள் பேசக் கூடாது. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் அளவில் உங்கள் பேச்சு இருப்பதை உறுதிப்படுத்துங்கள்’’ என தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த ராகுல் காந்தி, ‘‘குடியரசுத் தலைவரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு முக்கிய விஷயம் தேசிய பாதுகாப்பு பற்றியது. பாகிஸ்தான மற்றும் சீனா உடன் நமக்கு இருக்கும் உறவு நாட்டின் பாதுகாப்பு தொடர்பானதே. இந்த கட்டுரையில் மிக முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. அது பிரதமரின் எதிர்வினையைப் பற்றி பேசுகிறது’’ என்றார்.
இதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் எம்பிக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘அந்தக் கட்டுரையின் நகலை தயவு செய்து சமர்ப்பியுங்கள். நாங்கள் அதை ஆராய்ந்துவிட்டு உங்களிடம் தெரிவிக்கிறோம். எனவே, இப்போது குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மட்டும் உங்கள் விவாதத்தை தொடருங்கள்’’ என்றார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, ‘‘நான் தொடர்பில்லாத எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் பேசவில்லை. ஆனால், நான் தடுக்கப்படுகிறேன். சபாநாயகர் எனக்கு இப்படி அனுமதி வழங்குவது சரியல்ல. நான் இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர். ஆனால், நீங்கள் என்னை பேச அனுமதிக்கவில்லை’’ என குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து முதலில் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோது மீண்டும் இதே விவகாரத்தால் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ் எம்பிக்கள் காகிதத்தை கிழித்து, சபாநாயகரை நோக்கி எறிந்தனர். இதன் காரணமாக அவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அவை 3 மணிக்கு கூடியதும், அவையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக 8 பேர் கொண்ட காங்கிரஸ் எம்பிக்களின் பட்டியலை வாசித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அவர்களை இந்த கூட்டத் தொடரின் மீதமுள்ள காலத்துக்கு இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள், சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதங்களை வீசி எறிந்தனர்.