

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாக நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ட்ரோன்கள் மீது இந்திய ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரஜோரி மாவட்டத்தின் மஞ்சகோட் செக்டாரில் பாகிஸ்தான் ட்ரோன்கள் வட்டமடித்தன. சிறிது நேரம் இந்திய எல்லைக்குள் பறந்த அந்த ட்ரோன்களை குறிவைத்து இந்திய ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியது. இதைத்தொடர்ந்து அந்த ட்ரோன்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தப்பிச் சென்றன” என்றனர்.
இந்த சம்பவம் குறித்து ராணுவத் தளபதி உபேந்திர திவேதி கூறுகையில், ‘‘கடந்த மூன்று நாட்களாக ஜம்மு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரிடம் (டிஜிஎம்ஓ) கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நவ்ஷேரா செக்டார் மற்றும் பூஞ்ச் மாவட்டத்தின் மன்கோட், சம்பா மாவட்டத்தின் ராம்கர் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு சம்பா மாவட்டத்தின் பாலோரா கிராமத்தில் ட்ரோன் மூலம் வீசப்பட்ட இரண்டு பிஸ்டல்கள், மூன்று மேகசின்கள் மற்றும் ஒரு கையெறி குண்டு ஆகியவற்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
இதேபோன்று ரஜோரியின் சிங்குஸ் பகுதியில் உள்ள துங்கா காலா எல்லை வழியாக பாகிஸ்தான் ட்ரோன்கள் நுழைந்தன. உடனடியாக விழிப்புடன் செயல்பட்ட இந்திய வீரர்கள் அதனை விரட்டியடித்தனர். பாகிஸ்தான் இத்தகைய தொடர்ச்சியான அத்துமீறல்களை அடுத்து எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.