

சுவேந்து அதிகாரி - பபித்ரா கர்
கொல்கத்தா: மேற்குவங்த்தில் கடந்த 2021-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது நந்திகிராம் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, முதல்வர் மம்தா உடன் நேரடியாக மோதினார். இதில் சுவேந்து வெற்றி பெற்றார். இதன் பிறகு பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த முறை நந்திகிராம், பவானிபூர் ஆகிய இரு தொகுதிகளில் சுவேந்து அதிகாரி களமிறங்கி உள்ளார். இதில் நந்திகிராம் தொகுதியில் அவருக்கும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் பபித்ரா கர்ருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பவானிபூரில் முதல்வர் மம்தாவுக்கு எதிராக அவர் களமிறங்கியிருக்கிறார். இந்த சூழலில் கடந்த 23-ம் தேதி நந்திகிராம் தொகுதியில் தேர்தல் நடைபெற்றது. அங்கு சுவேந்து அதிகாரிக்கு பபித்ரா கர் கடும் சவாலாக உள்ளார்.
திரிணமூல் காங்கிரஸில் சுவேந்து இருந்தபோது அவரது வலது கரமாக பபித்ரா கர் செயல்பட்டார். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் சுவேந்து இணைந்தார். அதே காலத்தில் திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகிய பபித்ரா கர்ரும் பாஜகவில் ஐக்கியமானார். ஆனால் பாஜகவில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் பாஜகவில் இருந்து விலகிய பபித்ரா கர் மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு திரிணமூல் சார்பிலும், கடந்த 2021-ம் ஆண்டு பாஜக சார்பிலும் நந்திகிராம் தொகுதி எம்எல்ஏவாக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டார். இரு தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற பபித்ரா கர் மிக முக்கிய பணியாற்றினார். திரிணமூல், பாஜக ஆகிய இரு கட்சிகளின் சார்பில் நந்திகிராம் தொகுதியில் பபித்ரா தேர்தல் பணியாற்றியிருப்பதால் அந்த தொகுதியை பற்றி அவர் நன்கு அறிந்து வைத்துள்ளார்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது மம்தாவை 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து தோற்கடித்தார். இதேபோல இந்த முறையும் அவருக்கும் பபித்ரா கர்ருக்கும் இடையே கடும் போட்டி நிலவக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.
பாஜகவின் முதல்வர் வேட்பாளராக சுவேந்து அதிகாரி மறைமுகமாக முன்னிறுத்தப்பட்டு வருகிறார். எனவே நந்திகிராம் தேர்தல் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.