

அசாதுதீன் ஒவைசி
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் நடந்த 29 மாநகராட்சிக்கானத் தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் ஹைதராபாத் எம்பியான அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி (ஏஐஎம்ஐஎம்) 144 வார்டுகளில் வென்று கவனம் பெற்றுள்ளது.
இக்கட்சிக்கு சிறுபான்மையினர் அதிகமாக வாக்களித்திருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம், சிறுபான்மை வாக்குகளை வழக்கமாகப் பெற்ற காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையில், 2017-ம் ஆண்டை விட இந்த முறை ஏஐஎம்ஐஎம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. குறிப்பாக, மும்பை மாநகராட்சியின் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியாக கோவண்டி உள்ளது.
இதன் 6 வார்டுகளையும் வழக்கமாக வெல்லும் சமாஜ்வாதியிடமிருந்து ஏஐஎம்ஐஎம் பறித்துள்ளது. சாம்பாஜி நகர் எனப் பெயர் மாறிய அவுரங்காபாத்திலும் முஸ்லிம்கள் அதிகம். இங்கு காங்கிரஸ் அதிக வார்டுகளில் வெல்வது வழக்கம். ஆனால், இந்த தேர்தலில் ஒவைசியின் கட்சியின் வெற்றி பெற்று இரண்டாவது நிலையை பெற்றுள்ளது.
29 மாநகராட்சிகளிலும் சேர்த்து மொத்தம் 144 கவுன்சிலர்களை வென்றதன் மூலம், ஒவைசி தனது பலத்தை நிரூபித்துள்ளார். இந்த முடிவுகளின் மூலம், அசாதுதீன் ஒவைசி தலைமையிலான கட்சி மாநில அரசியலில் தனது வலுவான இருப்பை நிலைநிறுத்தியுள்ளது. காங்கிரஸின் ராகுல் காந்திக்கும், சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏஐஎம்ஐஎம் கட்சியின் இந்த எழுச்சி காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதிக்கு ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் மிகப்பெரிய வெற்றியாக சத்ரபதி சம்பாஜிநகரில் 33 வார்டுகள் பெற்றுள்ளது. மேலும், மாலேகாவ்னில் 21, அமராவதியில் 11, நாந்தேடில் 13, துலேயில் 10, மும்பை மற்றும் சோலாப்பூரில் தலா 8, தானேவில் 5, ஜல்காவ்னில் 2, மற்றும் பர்பனியில் 1 இடத்திலும் வென்றுள்ளது. இந்த முடிவுகள், ஏஐஎம்ஐஎம் இனி ஒரு குறிப்பிட்ட பகுதிகளுக்குள் முடங்கிய கட்சி அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.