

காங். எம்எல்ஏ பூல் சிங் பரையா
போபால்: மத்திய பிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டம் பந்தர் சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பூல் சிங் பரையா.
இவர் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, “நமது நாட்டில் பாலியல் வன்கொடுமையால் அதிக அளவில் பாதிக்கப்படுபவர்கள் யார்? பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான். ஒருவன் எந்த மனநிலையில் இருந்தாலும் சரி, அவன் ஒரு அழகான பெண்ணை பார்த்தால், அவனது மனம் திசை திரும்பும். அதோடு அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய தூண்டிவிடும். இதுதான் பாலியல் வன்கொடுமைக்கான வரையறையாக உள்ளது” என்று பேசினார்.
இவரது கருத்து பெரும் சர்ச்சையை எழுப்பி உள்ளது. அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்நிலையில் ம.பி.யின் இந்தூருக்கு நேற்று ராகுல் காந்தி வருகை தந்தார். காங்கிரஸ் எம்எல்ஏவின் சர்ச்சையான கருத்துகள் குறித்து ராகுலிடம் அப்போது தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநில பாஜக பொறுப்பாளர் ஆசிஷ் உஷா அக்ரவால் கூறும்போது, “காங்கிரஸ் எம்எல்ஏ பரையாவின் சர்ச்சை கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் ம.பி.க்கு ராகுல் காந்தி வந்துள்ளார். தங்களது கட்சி எம்எல்ஏ இவ்வாறு பேசியதற்காக அவரை கட்சியிலிருந்து ராகுல் நீக்க வேண்டும்” என்றார்.
ம.பி. முதல்வர் மோகன் யாதவ் கூறும்போது, “சமூக அக்கறை கொண்டவர் ராகுல் காந்தி. எனவே காங்கிரஸ் எம்எல்ஏ-வை அவர் கட்சியிலிருந்து நீக்கிவிடுவார் என நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.