வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை முறைப்படுத்த வீடு வீடாக ஆவணங்களைச் சேகரிக்க உத்தரவு

டெல்லியில் முக்கிய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தேர்தல் ஆணையர்கள் தகவல்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் டெல்லியில் நேற்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். படம்: பிடிஐ

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் டெல்லியில் நேற்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். படம்: பிடிஐ

Updated on: 
2 min read

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது (எஸ்ஐஆர்), பெயர் விடுபட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆவணங்களைச் சேகரிக்க தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்ஐஆர் பணி தொடர்பாக முன்னணி ஆங்கில நாளிதழ் அண்மையில் புலனாய்வு செய்தியை வெளியிட்டது. அதில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது என்று சுட்டிக் காட்டப்பட்டது.

படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றம், இசிஐநெட் மென்பொருளைக் கையாள்வதில் மாநில தேர்தல் அலுவலர்களின் அதிகாரம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் செய்தியில் கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன. இதைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

3 ஆணையர்கள் கூட்டம்: இந்தச் சூழலில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் டெல்லியில் நேற்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். அதன் பிறகு தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உயர்நிலைக் கூட்டம் சனிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. எஸ்ஐஆர் பணியின் போது வாக்காளர்களின் ஆவணங்களில் முரண்பாடு இருந்தால் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

அந்த வாக்காளர்களின் வீடுகளுக்குத் தேர்தல் அலுவலர்கள் (பிஎல்ஓ) நேரில் சென்று உரிய ஆவணங்களைப் பெற்று இசிஐநெட் மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நோட்டீஸ் அனுப்பப்பட்ட வாக்காளர்களைத், தேர்தல் அலுவலகங்களுக்கு (இஆர்ஓ/ஏஇஆர்ஓ) வருமாறு வற்புறுத்தக் கூடாது. மிக முக்கியக் காரணங்களுக்காக மட்டுமே வாக்காளர்களைத் தேர்தல் அலுவலகத்துக்கு வரவழைக்கலாம். ஆன்லைனில் மட்டுமே வாக்காளர்களிடம் விவரங்களைக் கேட்டறிய வேண்டும்.

சம்பந்தப்பட்ட வாக்காளருக்குப் பதிலாக அவரது குடும்ப உறுப்பினரும் ஆன்லைன் விசாரணையில் பங்கேற்கலாம். விடுபட்ட வாக்காளர் தொடர்பாக தேர்தல்பதிவு அலுவலர் (இஆர்ஓ) முடிவு எடுப்பார். இரவு தங்குமிடங்களில் வசிப்போர், தொழிலாளர்கள், ஏழைகள், வீடற்றோருக்காகச் சிறப்பு உதவி மையங்கள், சிறப்பு முகாம்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

விடுபட்ட வாக்காளர்கள்: எஸ்ஐஆர் பணி சார்ந்த படிவம் 6-க்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. எஸ்ஐஆர் பணிக்குப் பிறகு வழக்கமான விதிகளின்படி படிவம் 6-ஐ சமர்ப்பிக்கலாம். அவரவர் நிலை, அதிகாரத்துக்கு ஏற்ப தேர்தல் அலுவலர்கள் இசிஐநெட் இணையம், செயலியைப் பயன்படுத்தலாம்.

இசிஐநெட் சார்ந்த விவகாரங்களைத் துணைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு ஆய்வு செய்யும். இந்தக் குழுவில் ஐஐடி, ஐஐஐடி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர் ஒருவரும் இடம்பெறுவார். மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் கோரிக்கைகளை ஏற்று இசிஐநெட் தளத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

டெல்லி, மகாராஷ்டிரா தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்ஐஆர் பணிக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் கூட்டங்கள் தொடர்பான விவரங்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். தேர்தல் அதிகாரிகள் வெளிநாடு செல்வதற்கு முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

பிஹார், மேற்குவங்கம் உட்பட 20 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவுப் பெற்றுள்ளன. இந்த மாநிலங்களின் வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் விடுபட்டவர்கள் சம்பந்தப்பட்ட இஆர்ஓவிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். புதிய வாக்காளர்களும் விண்ணப்பங்களை அளிக்கலாம். அவர்களுக்காகச் சிறப்பு முகாம்களை நடத்த மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

கேபினட் செயலாளர்: தேர்தல் அலுவலர் ஒருவரின் மாற்றுப் பணி தொடர்பாகவே கேபினட் செயலருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. தேர்தல் ஆணையத்தின் கொள்கை முடிவுகளுக்கும் கேபினட் செயலருக்கு அனுப்பிய கடிதத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எஸ்ஐஆர் பணி தொடர்பாகக் கடந்த சில மாதங்களில் தேர்தல் ஆணையம் பல்வேறு முடிவுகளை எடுத்தது. குறிப்பாக பிஹார், மேற்குவங்கம் மற்றும் 30 மாநிலங்களின் எஸ்ஐஆர் பணி தொடர்பாக ஒருமித்த கருத்துடன் முடிவுகள் எடுக்கப்பட்டன.

உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்தின் முடிவுகளை ஆமோதித்திருக்கிறது. தற்போது 3-ம் கட்ட எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மீதமிருக்கும் 12 மாநிலங்களில் மட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கோவா மாநில வாக்காளர்கள் பட்டியலில் 97 பேரின் பெயர்கள் விடுபட்டன. இதில் 81 பேர் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து தேர்தல் அலுவலர்களிடம் சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ளோரின் வீடுகளுக்குப் பிஎல்ஓக்கள் நேரடியாகச் சென்று ஆவணங்களைப் பெற மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் டெல்லியில் நேற்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். படம்: பிடிஐ</p></div>
“30 நிமிடத்தில் 32 முறை உச்சரிப்பு... திமுக மீது விஜய்க்கு பயம்” - தாராபுரத்தில் உதயநிதி பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in