

புவனேஸ்வர்: ஒடிசா மாநில மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐ.டி.) அமைச்சர் முகேஷ் மகாலிங் கூறியதாவது: திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்தின் கீழ், அடுத்த 3 ஆண்டுகளில் 6,799 கிராம ஊராட்சிகளின் கீழ் வரும் சுமார் 50,000 கிராமங்களுக்கு ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு வழங்கப்படும்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முத்தரப்பு ஒப்பந்தம், மாநில மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, டிஜிட்டல் பாரத் நிதி மற்றும் பாரத் சஞ்சார் நிகாம் ஆகியவற்றுக்கு இடையே புதன்கிழமை கையெழுத்தானது.
ரூ.3,384 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் கீழ், ஒரு உயர் செயல்திறன் கொண்ட நெட்வொர்க்கிங் தொழில்நுட்பம் அமைக்கப்படும். இதன்மூலம் கிராம ஊராட்சிகள், அரசு நிறுவனங்கள், கிராமப்புற சமூகங்கள் மற்றும் வீடுகளுக்கு அதிவேக பிராட்பேண்ட் மற்றும் வீடுகளுக்கு ஆப்டிகல் பைபர் இணைப்புகளை வழங்கப்படும்.
இந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பு, மின்னணு ஆளுமை, டிஜிட்டல் கல்வி, தொலைமருத்துவம், நிதி உள்ளடக்கம் மற்றும் கிராமப்புற தொழில்முனைவு ஆகியவற்றை வலுப்படுத்துவதுடன், சுமார் 10,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.