

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பேசிக்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரது தங்கை பிரியங்கா காந்தி. அருகில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்.
புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் 6 முறை ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், மறைந்த 7 முன்னாள் எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்த வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம், அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
‘‘அனைவரும் இருக்கையில் அமரவேண்டும்’’ என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். ஆனால், அவரது அறிவுரையை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை மீண்டும் கூடியபோது அதே கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது, மறைந்த மாநிலங்களவை உறுப்பினர் களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேற்கு வங்கம், ராஜஸ்தான், கர்நாடகா, மத்திய பிரதேசம், குஜராத், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
அவர்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்பிறகு, நீட் தேர்வு முறைகேடு, அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதனால் அவை மதியம் 12 மணி வரையும், பின்னர் 12.30 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அவை கூடியபோது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் குறித்துப் பேசினார். அவர் கூறும்போது, “நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர்கள் பேரணி நடத்தி உள்ளனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம்’’என்று குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம்: எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், அடுத்தடுத்து பலமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை மற்றும் மாநிலங்களவை நேற்று 6 முறை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
தொகுதி மறுவரையறை மசோதா: மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துதற்காக அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய 3 மசோதாக்கள் கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் 2 பங்கு எம்.பி.க்களின் ஆதரவு தேவை. போதிய ஆதரவு இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை. தற்போதைய மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது.
திமுக ஆதரவு: பாஜக நம்பிக்கை
இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி. அசோக் சவான் நேற்று கூறும்போது, “தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற தேவையான எம்.பி.க்களின் பலம் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உள்ளது. திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களில் பலர் எங்கள் அணிக்கு வந்துள்ளனர். சில திமுக எம்.பி.க்களும் எங்களுக்கு ஆதரவு தரக்கூடும். தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறும். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.