

புது டெல்லி: மகளிர் இடஒதுக்கீட்டைத் தடுக்கும் செயலில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இது இந்தியாவின் மக்கள் தொகையில் பாதியளவு கொண்ட மகளிருக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் குற்றம்சாட்டினார்.
டெல்லியில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பாஸ்வான், “மக்களவையில் பிரதமர் அனைத்தையும் மிகத் தெளிவுடன் எடுத்துரைத்தார். நாம் இதை ஆதாயம் அல்லது இழப்பு என்ற கண்ணோட்டத்தில் விவாதிக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய ஒரு விஷயம், இதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பது, அதன் பின்னணியில் உள்ள நோக்கத்தின் நேர்மையின்மையைச் சுட்டிக்காட்டுகிறது.
ஒவ்வொரு முறையும், ஏதோ ஒரு பிரச்சினையைச் சாக்காகப் பயன்படுத்தி, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டைத் தடுக்கவே எதிர்க்கட்சிகள் செயல்பட்டுள்ளன. இது நாட்டின் மக்கள் தொகையில் பாதியளவு கொண்ட மகளிருக்கு இழைக்கப்படும் அநீதியாகும். அனைவரையும் ஒன்றிணைந்து, இந்த மகத்தான இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். நாம் இங்கு சாதி அல்லது மத அரசியல் செய்வதற்காக வரவில்லை. நாம் அனைவரின் நலன்களையும் பாதுகாக்க வேண்டும்.
இந்த மசோதா நிறைவேறினால் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் முடிவுக்கு வரும். நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள், மற்ற பெண்களுக்கு உத்வேகமாகத் திகழ்வார்கள்... தேசத்தைக் கட்டமைக்கும் பணியில் பெண்களின் பங்கேற்பை உறுதி செய்வதே பிரதமர் மோடியின் விருப்பமாகும்" என்று கூறினார்.