நிவாரணப் பொருட்களுடன் இலங்கை சென்றுள்ள இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை
கொழும்பு: டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவும் நோக்கில் 80 NDRF பணியாளர்கள் மற்றும் நிவாரணப் பொருட்களுடன் இந்திய விமானப்படையின் IL-76 விமானம் இலங்கை சென்றடைந்தது.
இது தொடர்பாக இலங்கை விமானப்படை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் நோக்கில் இந்திய விமானப்படையின் IL-76 விமானம் இலங்கை வந்துள்ளது. NDRF பணியாளர்கள் 80 பேர் விமானத்தில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் பெண்கள்.
மேலும், மோப்ப நாய்கள், பேரிடர் நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்பு உபகரணங்கள் ஆகியவையும் வந்துள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8வது பட்டாலியனின் கமாண்டன்ட் பி.கே. திவாரி தலைமையிலான இக்குழுவினர், காற்று நிரப்பப்பட்ட படகுகள், ஹைட்ராலிக் கட்டிங் மெஷின்கள், தகவல் தொடர்பு கருவிகள், மருத்துவ முதலுதவி உபகரணங்கள், அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கைக்கு ஏற்ப டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவும் நோக்கில் சாகர் பந்து ஆபரேஷன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் முதல் நிவாரணத் தொகுப்புகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்திய விமானப்ப படை கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் உதய்கிரி ஆகியவற்றின் மூலம் இந்த நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 14 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரிக்கு கூடுதல் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.
5வது பட்டாலியன் (புனே) மற்றும் 6வது பட்டாலியன் (வதோதரா) ஆகியவற்றில் இருந்து மேலும் 10 குழுக்கள் சென்னைக்குச் செல்கின்றன.
உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் திறமையான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய வானிலை ஆய்வு மையம், என்டிஎம்ஏ, மாநில நிர்வாகங்கள், வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து பணிபுரிந்து வருவதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.