ஜம்மு காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை; மற்றொருவர் சுற்றி வளைப்பு

ஜம்மு காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை; மற்றொருவர் சுற்றி வளைப்பு
Updated on: 
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 11-ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், சிஆர்பிஎஃப் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎப் வீரர்கள் மூவர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ‘பஸ்தரன்-இ-ஹுரியத் காஷ்​மீர்’ என்ற புதிய அமைப்பு பொறுப்​பேற்​றது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அல்லது அது தனது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில், இந்த தாக்குதல்கள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தின.

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டதாகக் கூறுபவர்களின் கருத்து தவறானது என விமர்சித்திருந்தார். இந்த தாக்குதலை அடுத்து, பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீர் மண்டல காவல்துறை, ‘குல்காமில் பயங்கரவாதிகளுடன் மோதல் தொடங்கியுள்ளது. ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் அப்பகுதி முழுமையாக சுற்றிவைக்கப்பட்டுள்ளது.

லத்தீப் பட் மற்றும் உமர் என இரு பயங்கரவாதிகள் சிக்கிய நிலையில், அவர்களில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு பயங்கரவாதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளார்’ என தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் குல்காம் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் சோதனைச் சாவடி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த இரு பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம் நடந்த தாக்குதலை அடுத்து, ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு எச்சரிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிஆர்பிஎஃப் சிறப்பு இயக்குநர் ஜெனரல் சந்தீப் கிர்வார் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை; மற்றொருவர் சுற்றி வளைப்பு
ராமர் கோயில் காணிக்கை திருட்டு: பாஜக, ஆர்எஸ்எஸ் நபர்களை காப்பாற்ற முயற்சி நடப்பதாக காங். குற்றச்சாட்டு

X