

விசாகப்பட்டினம்: டாடா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று அதிகாலை சுமார் 1.30 மணிக்கு 2 ஏசி பெட்டிகளில் தீ பிடித்தது. உடனே ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் உடனடியாக இறங்கினர். இதற்குள் தீ முழுவதுமாக பரவி 2 ஏசி பெட்டிகளும் தீயில் கருகின. இந்த விபத்தில் விஜயவாடாவைச் சேர்ந்த ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார்.
டாடா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில், ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகர் ஜங்ஷனிலிருந்து புறப்பட்டு எர்ணாகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 1.30 மணிக்கு ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் எலமஞ்சிலி எனும் இடத்தில் திடீரென அந்த ரயிலின் பி-1, எம்-2 ஏசி பெட்டிகளில் தீ பிடித்தது.
உடனே ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது தூங்கி கொண்டிருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு, தங்களது உடைமைகளை ரயிலிலேயே விட்டுவிட்டு, உயிரை காப்பாற்றிக்கொள்ள வெளியே ஓடினர். இதற்குள் அந்த 2 ஏசி பெட்டிகள் முற்றிலுமாக தீயில் கருகியது.
தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை போராடி அணைத்தனர். பின்னர் அந்த ரயிலை போலீஸார் ஆய்வு செய்தபோது, பி-1 பெட்டியில் பி-12 இருக்கையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல் கருகி இறந்து கிடந்தார். அவர் இறக்கும் முன் கடைசியாக தனது மனைவியுடன் செல்போனில் பேசி உள்ளார். அவர் கொண்டு வந்த பையில் ரூ.5.80 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் இருந்தன. இவற்றை அவரின் உறவினர்களை வரவழைத்து ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர்.
தீ விபத்தின்போது, அந்த பணப்பையை எடுத்துக் கொண்டு ஓட முடியாத காரணத்தினால், அந்த பை குறித்தும் விபத்து குறித்தும் அவரின் மனைவிக்கு தகவல் கூறிவிட்டு, உயிரோடு எரிந்து தனது உயிரை விட்டுள்ளார். அவரின் பெயர் சந்திரசேகர் சுந்தர் (70), விஜயவாடாவைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. விபத்து குறித்து அனகாபல்லி ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.