

ஜம்மு: ஜென்-ஸீ இளைஞர்கள் தங்களது உரிமைகளுக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் போராடினர். அரசுக்கு எதிராகப் போராடுவது இந்தியாவுக்கு எதிரானது என்று அர்த்தமல்ல என்று கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்தை, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வரவேற்றுள்ளார்.
மருத்துவ நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் வெளியானதைக் கண்டித்து, புதுடெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில், மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் பதவி விலகினர்.
இதற்கிடையே, மும்பையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், இளைஞர்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மோகன் பாகவத்தின் பேச்சை, உமர் அப்துல்லா வரவேற்றுள்ளார். இதுகுறித்து, உமர் அப்துல்லா கூறியதாவது: மோகன் பாகவத் உண்மையை கூறியுள்ளார்.
ஜென்-ஸீ இளைஞர்கள் தங்களது உரிமைகளுக்காகவும், தங்களது கோரிக்கைகளுக்காகவும் போராடினர். அந்தப் போராட்டம் நாட்டுக்கு எதிரானது அல்ல, அரசுக்கு எதிரானது. அரசுக்கு எதிராகப் போராடுவது, இந்தியாவுக்கு எதிரானது என்று அர்த்தமல்ல என்பதை அவர் சரியாகக் கூறியுள்ளார்.
இந்த வேறுபாட்டை மோகன் பாகவத் எடுத்துக்காட்டியிருப்பது நல்ல விஷயம். இதுபோன்ற போராட்டங்கள் பல நேரங்களில் தேவையான சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும். இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.