“காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் தாமதம் ஏன்?” - மத்திய அரசுக்கு உமர் அப்துல்லா சரமாரி கேள்வி

“காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் தாமதம் ஏன்?” - மத்திய அரசுக்கு உமர் அப்துல்லா சரமாரி கேள்வி
Updated on: 
2 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை தாமதப்படுத்துவது ஏன் ஏன்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தர் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய உமர் அப்துல்லா, “ஜம்மு காஷ்மீரில் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஒரு மாதமாக நாங்கள் காத்திருக்கிறாம். மாநில அந்தஸ்தை வழங்குவதில் ஏன் இவ்வளவு தாமதம் என்று மத்திய அரசைப் பார்த்து கேட்க வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு கூறி வருகிறது. எது சரியான நேரம்? சரியான நேரத்தை அளவிடுவதற்கு உங்களிடம் என்ன அளவுகோல் உள்ளது? மாநில அந்தஸ்து வழங்குவதற்கான சரியான நேரம் வந்துவிட்டது என்பதை நீங்கள் எந்த அடிப்படையில் தீர்மானிக்கப் போகிறீர்கள்?

கடந்த இரண்டு ஆண்டுகளில் பஹல்காம், குல்காம், ரியாசி, கிஷ்ட்வார் ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்கள், மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வராதவை. காவல்துறை அல்லது சட்டம் - ஒழுங்கு விவகாரங்கள் விஷயத்தில் எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இருந்தும், பஹல்காம் தாக்குதலைக் காரணம் காட்டி, இப்போதைக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என எங்களிடம் கூறப்படுகிறது.

குல்காமில் ஒரு சம்பவம் நடந்தால், அதே காரணம் சொல்லப்படுகிறது. ரியாசி அல்லது கிஷ்ட்வாரில் தாக்குதல் நடந்தாலும், மீண்டும் அதே காரணம் முன்வைக்கப்படுகிறது.

எதன் மீது எங்களுக்கு கட்டுப்பாடு இல்லையோ அதற்கு எப்படி எங்களைப் பொறுப்பாக்க முடியும்? எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட துறைகளில் நாங்கள் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றி உள்ளோம். உள்கட்டமைப்பு, கல்வி, நிர்வாகம் ஆகிய துறைகளில் எங்கள் அரசாங்கத்தின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யுங்கள். மற்றவர்களின் தோல்விகளுக்காக ஜம்மு காஷ்மீர் மக்கள் ஏன் துன்பப்பட வேண்டும்? இது என்ன மாதிரியான நீதி?

ஒன்று உங்கள் நோக்கம் சரியாக இல்லை. அல்லது நீங்கள் நேர்மையாக இல்லை. ஜம்மு காஷ்மீரின் முதல்வராக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மாநில அந்தஸ்தை வழங்க விரும்பவில்லை என்றால், அதை வெளிப்படையாகச் சொல்லும் துணிச்சல் உங்களுக்கு இருக்க வேண்டும். யூனியன் பிரதேசமாக தொடர்ந்து நீடிக்கச் செய்வதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அந்தஸ்தை மத்திய அரசு திட்டமிட்டே குறைக்கிறது.

தலைமைச் செயலாளர்களும் தலைமை நீதிபதிகளும் ஏறக்குறைய சமமான அந்தஸ்தை கொண்டுள்ளனர். ஆனால், யூனியன் பிரதேச முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களில் உள்ள அவர்களுக்கு இணையான பதவிகளில் இருப்பவர்ளைவிட குறைந்த அந்தஸ்திலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

நீங்கள் தலைமைச் செயலாளரையோ அல்லது தலைமை நீதிபதியையோ பலவீனப்படுத்த விரும்பவில்லை. மாறாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பலவீனப்படுத்தவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அவமானப்படுத்தவும் விரும்புகிறீர்கள்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தொகுதி மறுவரையறை, தேர்தல்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது.

எங்கள் அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே மாநில அந்தஸ்தை மீண்டும வழங்கக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றினோம். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அதனை வழங்கினோம். அதன் பிறகு ஜம்மு காஷ்மீருக்கு பிரதமர் மோடி வருகை தந்தபோதெல்லாம், இந்த வாக்குறுதியை நான் மீண்டும் மீண்டும் நினைவூட்டினேன். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் வலியுறுத்தினேன். இருந்தும் எங்கள் கோரிக்கையை ஏற்காமல் மத்திய அரசு தொடர்ந்து தாமதம் செய்து வருகிறது.” என குறிப்பிட்டார்.

“காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் தாமதம் ஏன்?” - மத்திய அரசுக்கு உமர் அப்துல்லா சரமாரி கேள்வி
பிலிப்பைன்ஸில் இந்திய கலைப் பொருட்களை வெளிநாட்டு தலைவர்களுக்கு பரிசளித்த பிரதமர் மோடி

X