

புதுடெல்லி: குளிர்கால கூட்டத்தொடர் முடிவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்து இந்தமுறை வித்தியாசமாக இருந்தது. இதில் எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி இல்லை என்றாலும், காங்கிரஸ் எம்பி பிரியங்கா வருகை தந்திருந்தார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரிலும் எதிர்கட்சிகள் வழக்கம் போல் அமளியில் ஈடுபட்டனர். கடைசியாக, ’விபி-ஜி ராம் ஜி' மசோதா அமலாக்கலின் போது, இருஅவைகளிலும் மோதல் இருந்தது. இதனால், கடந்தமுறைக் கூட்டத்தொடரைப் போலவே இந்தமுறையும் சபாநாயகரின் தேநீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்றபடி, எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி விருந்துக்கு வராமல், முன்னதாகவே ஜெர்மனி கிளம்பிவிட்டார்.
ஆனால், யாரும் எதிர்பாராவண்ணம், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் தேநீர் விருந்தில் கலந்துகொண்டு வியக்க வைத்தனர். இந்த முறை தேநீர் விருந்து சற்று வித்தியாசமாக இருந்தது. விருந்துக்கு முன்னதாகவே வந்திருந்த எம்பியான பிரியங்கா காந்தி வத்ரா, பிரதமர் மோடியுடன் சிரித்துப் பேசினார்.
காங்கிரஸின் எம்பிக்களான குமாரி ஷைல்ஜாசிங், பிரியங்கா வத்ரா, மாணிக்கம் தாகூர் மற்றும் முகமது ஜாவேத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநிலங்களவையில், மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, திக்விஜய் சிங் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர். மூத்த தலைவரான சோனியா காந்தியும் ஒரு பாஜக எம்பியுடன் தேநீர் விருந்தில் காணப்பட்டார்.
இதேபோல், இதர காங்கிரஸ் எம்பிக்களும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி எம்பிக்களுடன் தேநீர் அருந்தினர். சபாநாயகர் அளிக்கும் தேநீர் விருந்தில் காங்கிரஸ் எம்பிக்கள் இவ்வளவு இணக்கமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் காங்கிரஸின் எம்பிக்கள் வட்டாரம் கூறும்போது, “மத்திய அரசின் மசோதாக்களுக்கு மக்களவையில் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். முந்தைய கூட்டத்தொடருடன் ஒப்பிடும்போது இந்த முறை அவையின் நிலைமை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. எதிர்க்கட்சிகளுக்கும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதன் விளைவாக, 2014-க்கு பின் கடந்த கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது காணப்பட்ட எதிர்க்கட்சிகளின் அதிருப்தி இந்த முறை காணப்படவில்லை. இதனால், சபாநாயகரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய தேநீர் விருந்தில் கலந்துகொள்ள கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்தார்.” எனத் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு இடையே, மூன்று நாடுகளுக்கான பரபரப்பான சுற்றுப்பயணத்தில் இருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. எனினும், தன் பயணம் முடிந்த உடன் சபாநாயகரின் தேநீர் விருந்தில் அவரும் வந்து கலந்து கொண்டார். சபாநாயகரின் தேநீர் விருந்து என்பது ஒரு பாரம்பரியம் நிகழ்வாக நடைபெறுகிறது.
ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிந்த பிறகும், அனைத்துக் கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் அவரது அறையில் கூடுகிறார்கள். அப்போது, பரஸ்பர மோதல்கள் மற்றும் குற்றச்சாட்டுகளால் அடிக்கடி கொந்தளிப்புடன் காணப்பட்ட சூழல் மறக்கப்படுகிறது. பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சென்ட்ரல் ஹால் எனும் மத்திய அரங்கம் உள்ளது. அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிறர் கூட்டத்தொடர்களின் போது கூடுவது வழக்கம்.
இதில், முறைசாரா கலந்துரையாடல்கள் நடைபெறுவதும் உண்டு. எனினும், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அவர்களுக்கு ஒரே சந்திப்பு இடமாக உணவகம் மட்டுமே உள்ளது. இதனால், இந்த தேநீர் விருந்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒரு மத்திய அரங்கம் அவசியமாகிறது என அனைத்து எம்பிக்களும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினர்.