

புதுடெல்லி: அணுசக்தி மேம்பாட்டு மசோதா மக்களவையை அடுத்து, மாநிலங்களவையிலும் நேற்று நிறைவேறியது.
நாட்டில் அணு மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், அணுசக்தித் துறையை தனியாருக்கு திறந்துவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ‘இந்தியாவின் மாற்றத்துக்கான அணுசக்தி மேம்பாட்டு (சாந்தி) மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த மசோதாவை மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
அணுசக்தியை மேம்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2015-ல் இத்துறை தனியார்-அரசு கூட்டு முயற்சிக்கு திறந்து விடப்பட்டது. ஆனால், பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இப்போது தனியார் நிறுவனங்களுக்கும் திறந்துவிடப்பட உள்ளது. அதேநேரம் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விவாதத்துக்குப் பிறகு மசோதா நிறைவேறியது. இதையடுத்து, இந்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.