புதுடெல்லி: இந்திய சுதந்திரம் என்பது மிகப்பெரிய விலைக்குப் பிறகு பெறப்பட்டது என்றும் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு வலிமையான இந்தியாவை மீண்டும் கட்டியெழுப்ப இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார்.
வளர்ந்த இந்தியா(விக்சித் பாரத்) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2.O, புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கலந்துரையாடல் நிகழ்வின் தொடக்கவிழாவில் உரையாற்றிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ‘‘சுதந்திர இந்தியா இப்போது இருப்பதுபோல எப்போதும் சுதந்திரமாக இருந்தது இல்லை. இதற்காக நமது முன்னோர்கள் பெரும் தியாகங்களைச் செய்துள்ளனர். அவர்கள் பெரும் அவமானங்களைத் தாங்கிக் கொண்டனர். ஆழந்த கையறு நிலைக் காலங்களை அனுபவித்தனர். பலர் தூக்கு மேடையை எதிர்கொண்டனர்.
நமது கிராமங்கள் எரிக்கப்பட்டன. நமது நாகரீகம் அழிக்கப்பட்டது. நமது கோயில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. நாம் அமைதியான பார்வையாளர்களாக கையறு நிலையில் இருந்தோம்.
இந்த வரலாறு நமக்கு ஒரு சவாலை முன்வைக்கிறது. இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞருக்குள்ளும் அந்த தீப்பொறி இருக்க வேண்டும். பழிவாங்குதல் என்ற வார்த்தை சிறந்தது அல்ல. ஆனால், பழிவாங்குதல் என்பது ஒரு வலிமையான சக்தி. நமது வரலாற்றுக்காக நாம் பழிவாங்க வேண்டும். நமது உரிமைகள், நமது யோசனைகள், நமது நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒரு சிறந்த இந்தியாவை நாம் கட்டியெழுப்பக்கூடிய இடத்துக்கு இந்த நாட்டை நாம் மீண்டும் கொண்டு செல்ல வேண்டும்.
இந்தியாவின் பண்டைய நாகரீகம் மேம்பட்டதாகவும் அமைதியானதாகவும் இருந்தது. ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த கடந்தகால அலட்சியம் கடுமையான பாடங்களைக் கற்பித்தது. நம்மிடம் மிகவும் வளர்ந்த நாகரீகம் இருந்தது. நாம் யாருடைய வழிபாட்டுத் தலங்களையும் அழிக்கவில்லை. நாம் உலகின் எந்த பகுதிக்கும் சென்று கொள்ளையடிக்கவில்லை. உலகின் மற்ற பகுதிகள் மிகவும் பின்தங்கி இருந்தபோது நாம் அந்த நாட்டையும் அல்லது மக்களையும் தாக்கவில்லை.
ஆனால், நமது பாதுகாப்பையும், நமக்கு இருந்த அச்சுறுத்தல்களையும் புரிந்து கொள்வதில் நாம் தவறிவிட்டோம். நாம் அதில் அலட்சியமாக இருந்தபோது வரலாறு நமக்கு ஒரு பாடத்தைக் கற்பித்தது. அந்த பாடத்தை நாம் கற்றுக்கொண்டோமா? அந்த பாடத்தை நாம் நினைவில் வைத்திருப்போமா? வருங்கால சந்ததியினர் அந்த பாடத்தை மறந்துவிட்டால், அது இந்த நாட்டுக்கு ஏற்படும் மிகப்பெரிய சோகமாக இருக்கும்’’ என தெரிவித்தார்.
விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடலின் முதல் நிகழ்வு கடந்த ஆண்டு ஜனவரியில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.