‘‘போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மார்ச் 31 முதல் தீவிரப்படுத்தப்படும்’’ - அமித் ஷா அறிவிப்பு
புதுடெல்லி: போதைப்பொருள் அச்சுறுத்தலை வேரறுக்கும் நோக்கில், மார்ச் 31ம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு நாடு தழுவிய அளவில் போதைப் பொருட்களுக்கு எதிரான பிரச்சாரத்துடன் அவற்றக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமித் ஷா அறிவித்துள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் 9வது உயர்மட்டக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று (ஜன. 9) நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள், மாநில அரசாங்கங்களின் பிரதிநிதிகள், போதைப்பொருள் ஒழிப்பு சட்ட அமலாக்க அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போதைப்பொருள் பிரச்சினையைச் சமாளிக்க அனைத்துத் துறைகளும் மார்ச் 31ம் தேதிக்குள் ஒரு செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும், கண்காணிப்பு அமைப்புகளை நிறுவ வேண்டும், இதில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அமித் ஷா, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமித் ஷா, ‘‘போதைப் பொருட்களுக்கு எதிராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் அனைத்து முனைகளிலும் போராடி, போதைப் பொருட்கள் பிரச்சினைக்கு நாம் முடிவு காண வேண்டும். நாட்டின் இளைஞர்களை போதைப் பொருட்களிடமிருந்து பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
தொடர்ச்சியான விழிப்புணர்வு மட்டுமே நம்மை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். போதைப்பொருட்களுக்கு எதிரான இந்த போரில் போராடும் திறன் கொண்ட ஒரு நிரந்தர அமைப்பை உருவாக்க அரசாங்கம் விரும்புகிறது. போதைப்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்களிடம் எந்த இரக்கமும் காட்டப்படக்கூடாது என்பதே அரசாங்கத்தின் தெளிவான கொள்கை. போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்டவர்களை மனிதாபிமானத்துடன் அணுகி முன்னேற வேண்டும்.
போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசின் அனைத்து துறைகளும் 2029 வரை ஒரு செயல் திட்டத்தை தயாரித்து அதை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவுக்கு உட்பட்ட திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். அனைத்து டிஜிபிக்களும் அந்தந்த மாநிலங்களுக்கான செயல் திட்டத்தைத் தயாரித்து போதைப் பொருட்களை சரியான நேரத்தில் அழிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சுதந்திர நூற்றாண்டு கொண்டாடப்படும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை அனைத்துத் துறைகளிலும் உலகின் முதலிடமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை பிரதமர் மோடி நிர்ணயித்துள்ளார். அத்தகைய இந்தியாவை உருவாக்க இளம் தலைமுறையினருக்கு போதைப் பொருட்களிடமிருந்து முழுமையான பாதுகாப்பை வழங்குவது நம் அனைவரின் பொறுப்பாகும்.
சட்டம் ஒழுங்கைவிட போதைப் பொருள் பிரச்சினை சவால் மிகுந்தது. இதில் பயங்கரவாதத்தின் தொடர்பும் இருக்கிறது. நாட்டின் வருங்கால தலைமுறையினரை அழிக்கும் சதியும் இருக்கிறது. இளைஞர்களின் ஆரோக்கியம், சிந்திக்கும் திறன், செயல்படும் திறன், சமூகத்தில் வளர்ந்து வரும் அதிருப்தி ஆகிய அனைத்தும் இந்த பிரச்சினையுடன் தொடர்புடையது.
2004 முதல் 2013 வரை ரூ. 40,000 கோடி மதிப்புள்ள 26 லட்சம் கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேநேரத்தில், 2014 முதல் 2025 வரை ரூ. 1.71 லட்சம் கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது 11 மடங்கு அதிகம். 2020ம் ஆண்டு 10,770 ஏக்கர் அபின் பயிர் அழிக்கப்பட்டது. நவம்பர் 2025ல் 40,000 ஏக்கர் அபின் பயிர் அழிக்கப்பட்டது’’ என்று தெரிவித்தார்.
நக்ஸல் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் மத்திய அரசின் இலக்கு மார்ச் 31ம் தேதி முடிவடைய உள்ளதை அடுத்து, அந்த தேதியில் இருந்து போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.