ஆந்திராவில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி

விபத்துக்குள்ளான பேருந்து

விபத்துக்குள்ளான பேருந்து

Updated on
1 min read

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தின் பத்ராசலம் அருகே 35 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த பேருந்து சித்தூர் மாவட்டத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இதில், 33 பக்தர்கள், ஒரு ஓட்டுநர், ஒரு கிளீனர் என 35 பேர் பயணித்துள்ளனர். பத்ராசலம் கோயிலுக்குச் சென்று தரிசித்த இவர்கள் பின்னர் அங்கிருந்து அன்னவரம் நோக்கி சென்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை 4 மணி அளவில், பத்ராசலம் - சிந்தூர் இடையே துளசிபகாலு என்ற கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்கள் அனைவரும் பத்ராசலத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அல்லூரி சீதாராமராஜு மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, “அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், சிந்தூர் அருகே பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது.

விபத்து குறித்து அதிகாரிகளிடம் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்தேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதி உதவி வழங்கும்.” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு வேதனையளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000மும் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>விபத்துக்குள்ளான பேருந்து</p></div>
பள்ளி பாடத்திட்டத்தில் பறை இசையை கொண்டுவர வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in