

பிரதிநிதித்துவப்படம்
புதுடெல்லி: போலி பிஎப் கணக்குகள் மூலம் ரூ.19.33 கோடி மோசடி செய்ததாக நோக்கியா அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது: 94 போலி பிஎப் கணக்குகளை உருவாக்கி, ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பிடமிருந்து (இபிஎப்ஓ) ரூ.19.33 கோடி முறைகேடாக பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நோக்கியா நிறுவனத்தில் பணியாற்றும் வைபவ் வர்மா, காமராஜு முத்யாலா ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இவர்கள் இருவரும் 94 போலி பிஎப் கணக்குகளை உருவாக்கி, அவற்றில் ரூ.19.33 கோடியை மாற்றியுள்ளனர். 2023 ஆகஸ்ட் வரை இபிஎப்ஓ சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனமாக நோக்கியா செயல்பட்டு வந்தது.
2023 ஜூலையில் முந்தைய சேமிப்புத் தொகைகள் அனைத்தையும் இபிஎப்ஓவிடம் ஒப்படைத்தது. இந்த மாற்றத்துக்கு பிந்தைய நடைமுறைகளின் போதுதான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இவ்வாறு சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.