

புதுடெல்லி: டெல்லியிலிருந்து குஜராத் வரை ஆரவல்லி மலைத் தொடர் உள்ளது. இந்த மலைத் தொடரை பாதுகாக்கும் வகையில், இங்கு புதிய சுரங்கங்கள் அமைக்க முழு தடை விதிக்கும்படி ஆரவல்லி மலைத்தொடர் அமைந்துள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆரவல்லி மலைத் தொடரில் சுரங்கப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டிய கூடுதல் இடங்களையும் அடையாளம் காணும்படி வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலுக்கு (ஐசிஎப்ஆர்இ), மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இங்கு தற்போது நடைபெறும் சுரங்கப் பணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படவுள்ளன. ஆரவல்லி மலைத் தொடர் பகுதியில் நிலையான சுரங்கப் பணிகளுக்கு அறிவியல் அடிப்படையிலான திட்டத்தை தயாரிக்கும் படி ஐசிஎப்ஆர்இ-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.