

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்
புதுடெல்லி: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் வாக்கிங் சென்ற ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், மாணவர்கள், ஆசிரியர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (AMU) புதன்கிழமை இரவு வாக்கிங் சென்ற ஒரு பள்ளி ஆசிரியர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர் அப்பல்கலைக்கழகத்தின் ஏபிகே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ராவ் டேனிஷ் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இரவு 9 மணியளவில் நடந்ததாகவும், நூலக வளாகத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பல்கலைக்கழக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கியால் சுட்ட நபர், ராவ் டேனிஷ் அலியை பார்த்து, “இப்போது நீங்கள் என்னை அறிந்துகொள்வீர்கள்...” எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அலி மற்றும் அவருடன் வந்தவர்களை மிரட்டி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஆசிரியர் தலையில் சுமார் இரண்டு முறை சுடப்பட்டுள்ளது.
பின்னர் அவர் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம், மாணவர்கள், ஆசிரியர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், காவல்துறை இச்சம்பவம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விசாரணை தொடர்வதால் கூடுதல் விவரங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.