“நீதித்துறையை மதிக்கிறோம்; இனி இப்படி நடக்காது!” - என்சிஇஆர்டி சர்ச்சையில் ‘வருந்திய’ மத்திய கல்வி அமைச்சர்

“நீதித்துறையை மதிக்கிறோம்; இனி இப்படி நடக்காது!” - என்சிஇஆர்டி சர்ச்சையில் ‘வருந்திய’ மத்திய கல்வி அமைச்சர்
Updated on
2 min read

ஜாம்ஷெட்பூர்: நீதித்துறை தொடர்பாக என்சிஇஆர்டி பாட புத்தகத்தில் இடம்பெற்ற கருத்துகளுக்காக மத்திய அரசின் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் வருத்தம் தெரிவிப்பதாகக் கூறியுள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "நாங்கள் நீதித்துறையை மதிக்கிறோம். என்ன நடந்ததோ அது துரதிருஷ்டவசமானது. அரசின் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் நான் வருத்தம் தெரிவிக்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த விவகாரம் என் கவனத்துக்கு வந்த உடன், அனைத்து புத்தகங்களையும் திரும்பப் பெற்று ரத்து செய்யுமாறு என்சிஇஆர்டி-க்கு உத்தரவிட்டேன். நீதித்துறையை அவமதிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. உச்ச திமன்றம் என்ன உத்தரவிட்டுள்ளதோ அது பின்பற்றப்படும்.

என்சிஇஆர்டி புத்தகத்தில் இதுபோன்ற பொறுப்பற்ற பகுதியைச் சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பொறுப்பை, எனது துறைச் செயலாளருக்கு வழங்கியுள்ளேன். இதை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.

இதுபோன்ற ஒரு பிரச்சினை மீண்டும் எழாமல் பார்த்துக் கொள்ளுமாறு உடனடியாக நான் உத்தரவிட்டேன். இது குறித்து விசாரணை நடத்தப்படும். புத்தகத்தையும் சம்பந்தப்பட்ட பகுதியையும் தயாரிப்பதில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தவறு மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம். நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில், நீதித்துறை மிக உயர்ந்த, மிகவும் மரியாதைக்குரிய பதவியை வகிக்கிறது என்று நான் நம்புகிறேன்.

அதன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது நமது அரசியலமைப்பு மற்றும் தார்மிகப் பொறுப்பு. நீதித்துறையின் உத்தரவுகளை மதிப்து அவற்றை பின்பற்றுவதில் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்ற உறுதியை நாட்டின் 140 கோடி குடிமக்களுக்கும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவு: முன்னதாக, என்​சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடத் திட்டத்​தில், ‘நீ​தித்​துறை​யில் ஊழல்’ என்ற பகுதி பெரும் சர்ச்சையை ஏற்​படுத்திய நிலையில், அந்த பாட புத்தகத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து இன்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘‘நீதித்துறை தொடர்பாக புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அத்தியாயம் பொறுப்பற்றது. நீதித்துறையை அவமதிக்கக்கூடியது. இதை உணராமல் என்​சிஇஆர்டி கவுன்சில் இயக்குநர் அதை ஆதரித்தார். நீதித்துறையின் கண்ணியத்தை இழிவுபடுத்துவதற்கும், குறைமதிப்புக்கு உட்படுத்துவதற்குமான திட்டமிடப்பட்ட நடவடிக்கை இது. இதை சரி செய்யாவிட்டால், நீதித்துறை மீதான பொதுமக்களின் குறிப்பாக மாணவர்களின் நம்பிக்கை சிதையக்கூடும்.

என்​சிஇஆர்டி வெளியிட்டுள்ள இந்த புத்தகத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த புத்தகத்தை அச்சிடவும் விற்பனை செய்யவும் முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. அச்சிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஆன்லைனில் பரவும் அவற்றின் நகல்கள் ஆகியவற்றை அரசு உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், இதற்கு காரணமானவர்கள் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்பதற்கு என்சிஇஆர்டி இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in