

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கடந்த 2-ம் தேதி மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது முன்னாள் ராணுவ தளபதி நரவனேஎழுதியுள்ள வெளிவராத புத்தகத்தை மேற்கோள் காட்டி, சீன எல்லைப் பிரச்சினை குறித்து பேச எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் முயன்றார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதன் காரணமாக மக்களவை, மாநிலங்களவையை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் நேற்று நோட்டீஸ் வழங்கின. இதில் காங்கிரஸ், திமுக,
சமாஜ்வாதி, ஆர்ஜேடி, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸில் கையெழுத்திடவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நோட்டீஸில் கையெழுத்திடவில்லை.
காங்கிரஸ் கொறடா கே.சுரேஷ், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நேரடியாக நோட்டீஸை வழங்கினார். இந்த நோட்டீஸை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மக்களவை செயலாளர் உத்பல் குமார் சிங்குக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
எதிர்க்கட்சிகள் வழங்கிய நோட்டீஸில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்பு சட்டம் பிரிவு 94 (சி)-ன் படி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி நோட்டீஸ் வழங்குகிறோம். சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். அவையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
கடந்த 2-ம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதேபோல பலமுறை எதிர்க்கட்சி தலைவர் அவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த 3-ம் தேதி எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் ஜனநாயக முறையில் அவையில் போராடினர். ஆனால் அவர்கள் பட்ஜெட் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4-ம் தேதி பாஜகவை சேர்ந்த எம்.பி. ஒருவர், 2 முன்னாள் பிரதமர்கள் குறித்து மக்களவையில் அவதூறாக பேசினார். அந்த எம்.பி. அவையில் அடிக்கடி அநாகரிகமாக பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 5-ம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். இது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது. சபாநாயகர் தனது பதவிக்கான கண்ணியத்தை காப்பாற்றவில்லை. இவ்வாறு நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் பேச ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இண்டியா கூட்டணி தலைவர்கள் கடந்த திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர். இதில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர 14 நாட்களுக்கு முன்பாகவே நோட்டீஸ் வழங்க வேண்டும். எனவே, சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் வழங்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இரண்டாம் அமர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வில் சபாநாயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் அவையில் கொண்டு வரப்படும்.
மக்களவையின் மரபு, மாண்பை கருதி நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கையெழுத்திடவில்லை. சபாநாயகரிடம் முதலில் ஒரு நோட்டீஸை வழங்கினோம். அதில் சில தவறுகள் திருத்தப்பட்டு மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த நோட்டீஸ் குறித்து பல்வேறு கட்ட பரிசீலனைகள் நடைபெறும். 14 நாட்கள் கழித்து நம்பிக்கையில்லா தீர்மானம் அவைக்கு கொண்டு வரப்படும். அப்போது தீர்மானத்துக்கு
ஆதரவு தெரிவிப்பவர்கள் எழுந்து நிற்குமாறு சபாநாயகர் கூறுவார். 50 எம்.பி.க்கள் எழுந்து நின்று தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தால், மார்ச் 9-ம் தேதி அவையில் விவாதம் நடத்தப்பட்டு, இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
திரிணமூல் விளக்கம்: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி கூறும்போது, “மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளோம். அவர் 3 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நாங்களும் கையெழுத் திடுவோம்" என்று தெரிவித்தார்.
இதுகுறித்து மக்களவை வட்டாரங்கள் கூறும்போது, “சபாநாயகர் ஓம் பிர்லா மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன. எனவே, செவ்வாய்க்கிழமை முதல் மக்களவைக்கு செல்வதை அவர் தவிர்த்து உள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்ட பிறகே அவர் அவைக்குச் செல்வார்" என்று தெரிவித்தன.
போதிய எம்.பி.க்கள் இல்லாததால் தோல்வியடையும்: கடந்த 1954-ம் ஆண்டில் அப்போதைய மக்களவை சபாநாயகர் மலவாங்குக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. கடந்த 1966-ம் ஆண்டில் அப்போதைய மக்களவை சபாநாயகர் ஹுக்கும் சிங், கடந்த 1987-ம் ஆண்டில் அன்றைய மக்களவை சபாநாயகர் பல்ராம் ஜாக்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. மூன்று முறையும் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
தற்போது 4-வது முறையாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த மசோதாவை நிறைவேற்ற அவையில் உள்ள எம்.பி.க்களில் 50 சதவீத எம்.பி.க்களின் ஆதரவு தேவை.
மக்களவையின் மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 543. உதாரணத்துக்கு அவையில் 10 எம்.பி.க்கள் இல்லாமல் 533 எம்.பி.க்கள் இருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற 267 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.
மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 எம்.பி.க்கள் உள்ளனர். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணிக்கு 238 எம்.பி.க்களின் பலமே உள்ளது. எனவே, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைவது உறுதி என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.