இந்தியாவில் எபோலா தொற்று இதுவரை இல்லை: மத்திய சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் எபோலா தொற்று இதுவரை இல்லை: மத்திய சுகாதார அமைச்சகம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள உகாண்டா நாட்டைச் சேர்ந்தவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எபோலா தொற்று இல்லை என்பது உறுதியான நிலையில், இந்தியாவில் எபோலா தொற்று பாதிப்பு இதுவரை பதிவாகவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆப்ரிக்காவின் காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா நோய் பரவல் பதிவாகியுள்ளதன் அடிப்படையில், இதனை சர்வதேச பொது சுகாதார அவசரநிலை (PHEIC) என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், காங்கோ மற்றும் உகாண்டாவில் தற்போது பரவி வரும் எபோலா வைரஸ் நோயின் 'புண்டிபுகியோ' (Bundibugyo) வகைப் பரவலை, ஆப்ரிக்க கண்ட அளவிலான பொது சுகாதார அவசரநிலை (PHECS) என ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Africa CDC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

மே 22 அன்று, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட பரிந்துரைகளில், புண்டிபுகியோ வைரஸ் கண்டறியப்பட்ட பகுதிகளிலிருந்து காய்ச்சல் அறிகுறிகளுடன் வரக்கூடிய பயணிகளைக் கண்டறிந்து, கண்காணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், புண்டிபுகியோ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை, காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு இந்திய அரசு அனைத்து இந்தியர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “காங்கோ, உகாண்டா நாடுகளில் வசித்து வருபவர்கள் மற்றும் இந்நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள், உள்ளூர் அதிகாரிகளால் வெளியிடப்படும் பொது சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் உகாண்டாவில் இருந்து சமீபத்தில் இந்தியா வந்த பயணி ஒருவருக்கு லேசான உடல் வலி அறிகுறிகள் இருந்ததால் அவர் பெங்களூருவில் உள்ள தொற்று நோய்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் எபோலா தொற்று இதுவரை பதிவாகவில்லை. இவ்விஷயத்தில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு இயங்க மத்திய சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. அனைத்து அறிவிக்கப்பட்ட நுழைவுப் பகுதிகளிலும் பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. எனவே, மக்கள் பீதி அடைய வேண்டாம். தவறான தகவல்களைப் பரப்புவதை தவிர்க்க வேண்டும். அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எபோலா தொற்று இதுவரை இல்லை: மத்திய சுகாதார அமைச்சகம்
வாட்டும் வெப்ப அலை: முன்னெச்சரிக்கையுடன் இருக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in