

அசாம் முதல்வர் ஹிமந்தா
குவாஹாட்டி: அசாமில் மாட்டிறைச்சி உண்பது குறித்த தனது நிலைப்பாட்டை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெளிவுபடுத்தியுள்ளார். என்றாலும் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அவர் பின்வாங்கி விட்டதாக சமாஜ்வாதி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
இது தொடர்பாக ஹிமந்த பிஸ்வா சர்மா, செய்தியாளர்களிடம் கூறுகையில், “முஸ்லிம்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். அதற்குத் தடை ஏதும் இல்லை. அசாமில் மாட்டிறைச்சி சாப்பிடும் முஸ்லிம் சமூகம் பெரிய அளவில் உள்ளது. அவர்களைச் சாப்பிட வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. உங்கள் வீடுகளுக்குள் வைத்துச் சாப்பிடுங்கள், பொது இடங்களில் வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்” என்றார்.
"மாட்டிறைச்சி சாப்பிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை விடமாட்டேன்" என்று ஹிமந்தா ஏற்கெனவே கூறியிருந்த நிலையில் தற்போது அவர் மாறுபட்ட கருத்தை கூறியிருப்பது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிமந்தாவின் கருத்தை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்து, “பாஜகவை அகற்றுவோம், கோமாதாவை பாதுகாப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.