

புதுடெல்லி: ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் மாநிலங்களவை எம்.பி.யாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பிஹார் முதல்வராக 10-வது முறையாக பதவி வகிக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், நிதிஷ் குமார் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் விரைவில் பிஹார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (ஜேடியு) அங்கும் வகிக்கும் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக பிஹார் முதல்வராக பதவியேற்பார்.
இதுகுறித்து ஜேடியு மூத்த தலைவர் ஷ்ரவண் குமார் கூறும்போது, “நிதிஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், அரசியலமைப்பு விதிகளின்படி 6 மாதங்கள் வரை அவர் முதல்வர் பதவியில் தொடர முடியும்’’ என்றார்.
பிரதமர் மோடி வாழ்த்து: பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நாட்டில் அனுபவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் நிதிஷ் குமார். பிஹார் மாநில வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றி உள்ளார். அவரை மீண்டும் நாடாளுமன்றத்தில் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய நீண்ட அரசியல் அனுபவம் நாடாளுமன்ற மாண்புக்கு மேலும் வலு சேர்க்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.