

நிதின் நவீன்
புதுடெல்லி: வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து நாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதாக இண்டியா கூட்டணி மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினரை பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இன்று நாட்டில் மிகவும் ஆபத்தான மற்றும் தீவிரமான சூழ்நிலையை உருவாக்க முயற்சி நடைபெறுகிறது. இதைச் செய்பவர்கள் யார்? ராகுல் காந்தி தலைமையிலான இண்டியா கூட்டணி, அரவிந்த் கேஜ்ரிவாலின் கூட்டாளிகளாக உள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) என்ற இரண்டு அராஜகக் குழுக்கள்தான்.
மக்கள் அவர்களை நிராகரித்து, ஜனநாயகம் அவர்களைத் தண்டித்தபோது, அந்தத் தோல்வியை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, நாட்டை சீர்குலைக்கும் திட்டத்தை அவர்கள் வகுத்துள்ளனர்.
அரசியலமைப்பை முன்னிறுத்திக் கொண்டு ஜனநாயக அமைப்புகளையே எதிர்ப்பது மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். எதிர்க்கட்சித் தலைவர்கள் பயன்படுத்தும் மொழியை நாட்டின் இளைஞர்கள் கவனித்து வருகின்றனர். அரசியலமைப்பு அமைப்புகள் மற்றும் உயர்பொறுப்பு வகிப்போர் மீதான தாக்குதல்களை அவர்கள் நிராகரிப்பார்கள்.
இந்தப் போராட்டங்கள் உள்நாட்டு அரசியல் காரணங்களால் மட்டுமே நடத்தப்படவில்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத வெளிநாட்டு சக்திகளும் நாட்டை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன.
உலகளாவிய நெருக்கடிகள் இருந்தபோதிலும் நாடு முன்னேற்றம் கண்டு வருவது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
நாட்டில் பதற்றமான சூழலை உருவாக்க முயற்சி செய்யும் இந்த சக்திகளை இந்திய அரசு கடுமையாகக் கையாளும். அதேநேரம், பாஜக தொண்டர்களும் மக்களுக்கு துணையாக இருந்து இந்த சதித் திட்டங்களை முறியடிப்பார்கள்” என்று நிதின் நவீன் கூறினார்.
எஸ்ஐஆர் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இண்டியா கூட்டணிக் கட்சிகள் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.